பாரிய போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படையிடம் கையளித்தது சீனா

சீனாவிடம் இருந்து P 625 இலக்க போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படை நேற்று முன்தினம் ஷங்காய் கப்பல் கட்டும் தளத்தில், பொறுப்பேற்றுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன இந்தப் போர்க்கப்பலை சீன அதிகாரிகளிடம் இருந்து பொறுப்பேற்றார்.

இதையடுத்து, P 625 போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கப்டன் நளிந்திர ஜெயசிங்கவிடம், சீன கடற்படையின், கருவிகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் பான் ஜியாயுன் முறைப்படி போர்க்கப்பலைக் கையளித்தார்.

1994ஆம் ஆண்டு கட்டப்பட்ட, 112 மீற்றர் நீளமும், 12.4 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் போர்க்கப்பல், 2300 தொன் எடை கொண்டது.

சீன கடற்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட ஏவுகணை நாசகாரி கப்பலான இது, மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பின்னர் சிறிலங்கா கடற்படையிடம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

18 அதிகாரிகளும், 110 கடற்படையினரும் இந்தப் போர்க்கப்பலில் பணியாற்றுவர்.

இந்தப் போர்க்கப்பல் சிறிலங்காவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான ஆழ்கடல் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்தக் கப்பலைக் கையளிக்கும் நிகழ்வில் பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் கல்ப சஞ்ஜீவ, மற்றும் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வரும் ஜூன் 14ஆம் நாள், சிறிலங்கா நோக்கிப் புறப்படவுள்ள இந்தப் போர்க்கப்பல், இம்மாத இறுதியில் கொழும்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.