பாதுகாப்பு தரப்பிலுள்ள ஓட்டைகளே தொடர் குண்டுத்தாக்குதலுக்கு காரணம்! ஒப்புக்கொண்டார் ருவன் விஜேவர்தன

இலங்கையின் பாதுகாப்பு தரப்பில் உள்ள ஓட்டைகள் தொடர் குண்டு தாக்குதலுக்கு ஏதுவாக அமைந்ததென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சற்று முன் கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் நடந்த சந்திப்பில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

இந்தியா மற்றும் பல நாடுகளின் உயர்மட்ட தரப்புக்கள் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தாலும் அதனை முறையாக புலனாய்வுத்துறை கவனிக்கவில்லை.பாணந்துறை மற்றும் நீர்கொழும்பில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.லண்டனில் படித்து ஆஸ்திரேலிய பல்கலையில் பட்டம் பெற்ற ஒருவரும் தற்கொலைதாரிகளில் உள்ளார். வசதி படைத்தவர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் .

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாக இது நடத்தப்பட்டது என்பதே படைத்தரப்பின் யூகம்.அதனை வைத்து இவர்களை ஊக்குவித்திருக்கலாம் என்று கருதுகிறோம்.விசாரணைகள் நடக்கின்றன.

புலனாய்வுத்துறையினர் ஒழுங்காக நடந்திருந்தால் சேதங்களை தடுத்திருக்கலாம் .அல்லது குறைத்திருக்கலாம். ஆனால் பாதுகாப்புத் தரப்பு அதனை செய்யத் தவறிவிட்டது.

இந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகளுக்கு உலக நாடுகள் எமக்கு உதவவுள்ளன. இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் இலங்கையர்கள் .

9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தெமட்டகொட பெண் குண்டைவெடிக்கவைத்து தற்கொலைதாரியாக மாறியுள்ளதாக விசாரணைகள் சொல்கின்றன என்றார் அமைச்சர் ருவன்