பாக்.முன்னாள் அதிபர் முஷரப்பின் மகா கூட்டணி ஒரே நாளில் உடைந்தது

தேச துரோகம், முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோ படுகொலை சதி உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டபட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், கடந்த ஆண்டு பாகிஸ்தானைவிட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார். அவர் ராணுவப் புரட்சி மூலம் 1999-இல் ஆட்சியைக் கைப்பற்றி 2008-ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். 2008-இல் பாகிஸ்தானைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு நாடு திரும்பி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டார். அதன்படி,23 அரசியல் கட்சிகள் அடங்கிய பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் என்கிற மகா கூட்டணி அமைத்திருப்பதாகவும் அந்தக் கூட்டணிக்குத் தான் தலைமை வகிப்பதாகவும் பர்வேஸ் முஷாரப் துபையிலிருந்து காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றதாக கூறப்பட்ட பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக், மஜ்லிஸ் வஹதத்-ஏ-முஸ்லிமீன் என்னும் இரண்டு முக்கியக் கட்சிகள் முஷாரப் மகா கூட்டணியில் தாங்கள் சேரவே இல்லை என்று தெரிவித்துள்ளன.இதனிடையே மகா கூட்டணியில் இடம் பெற்றதாகக் கூறப்பட்ட சன்னி இத்திஹாத் கவுன்சில் அமைப்பும் தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவதற்காக அதில் சேரவில்லை என்று தெரிவித்தது.

முஷரப் அறிவித்த மறுநாளே, மகா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியிருக்கிறது. இதன்மூலம், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அதிகாரத்துக்கு வர முஷாரப் மேற்கொண்ட முயற்சி முதல் படியிலேயே சறுக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY