பாகிஸ்தான் நிதி மந்திரியை கைது செய்ய பிடிவாரண்ட்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார்.

அவர்மீது விரிவான விசாரணை நடத்துமாறும், ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இதேபோல், பாகிஸ்தான் நிதி மந்திரிக்கு இஷாக் டர் என்பவருக்கு எதிராகவும் வருமானத்துக்கு அதிகமாக 83 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கின் முதல் விசாரணைக்கு ஆஜராக தவறிய இஷாக் டர், கடந்த 23-ம் தேதி உள்பட 7 முறை விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்தமுறை இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது இஷாக் டர் ஆஜராகவில்லை. நீதிபதி முஹம்மது பஷீர் முன்னர் அவரது வழக்கறிஞர் காஜா ஹாரிஸ், ’மத்திய ஆசியா பிராந்திய பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்பதற்காக தஜகிஸ்தான் நாட்டில் உள்ள துஷான்பே நகருக்கு சென்ற இஷாக் டர் அங்கிருந்து ஜெத்தா நகருக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜெத்தாவில் இருந்து சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்ல வேண்டியுள்ளதால் இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி மறுவிசாரணையின்போது இஷாக் டர் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இஷாக் டர் ஆஜராகவில்லை. எனவே, இஷாக் டர்-ஐ கைது செய்து ஆஜர்படுத்துமாறு சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அவர் எப்போது வந்தாலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

LEAVE A REPLY