பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டில் இந்தியாவுக்கு…வெற்றி!

தி ஹேக், நெதர்லாந்து:உளவு பார்த்ததாகக் கூறி, இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 46, துாக்கிலிட சதிதிட்டம் தீட்டிய பாகிஸ்தானுக்கு எதிராக, சர்வதேச கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜாதவுக்கான தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும், இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை, 2016, மார்ச்சில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
அவருக்கு, பாகிஸ்தான் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ள, ஐ.நா.,வின் சர்வதேச கோர்ட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக, மே, 9ல் வழக்கு தொடரப்பட்டது.

அனுமதி மறுப்பு

‘ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என, மே, 10ல், சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.அதன் பின், கடந்த வாரத்தில், இது தொடர்பான வாதங்கள் நடந்தன. அதில், ‘பொய் வழக்கில், ஜாதவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை சந்திக்க, இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

‘இந்த வழக்கின் விசாரணைக்காக காத்திருக்காமல், அவருக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற,பாகிஸ்தான் தயாராகி வருகிறது’ என, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஹரீஷ் சால்வே வாதிட்டார்.

கவலை புரிகிறது

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், 11 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச கோர்ட் அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:தங்கள் வாதத்தின்போது, ‘ஜாதவுக்கான மரண தண்டனையை, வரும் ஆகஸ்ட் வரை நிறைவேற்ற மாட்டோம்’ என, பாகிஸ்தான் கூறியது. அதற்கு பின், தண்டனையை நிறைவேற்ற, பாக்., தயாராக உள்ளது தெரிய வருகிறது.

ஜாதவுக்கான தண்டனையை நிறைவேற்ற, பாகிஸ்தான் சதி செய்கிறது என்ற இந்தியாவின் கவலை புரிகிறது. அதனால், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற, பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில், இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

வியன்னா ஒப்பந்தத்தின்படி, சிறையில் உள்ள கைதியை சந்திக்க, அனுமதிக்க வேண்டும். இந்தியா, 16 முறை விண்ணப்பித்தும், பாக்., அனுமதிக்காததை ஏற்க முடியாது; ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.ஜாதவ் தொடர்பாக, பாகிஸ்தானில் நடக்கும் வழக்கின் நிலவரம் குறித்து, இந்த கோர்ட்டுக்கு அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு கோர்ட், தன் உத்தரவில் கூறியுள்ளது. சர்வதேச கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

சுஷ்மா, மோடி, சால்வேக்கு பாராட்டு

சர்வதேச கோர்ட் அளித்துள்ள உத்தரவைத் தொடர்ந்து, இதில் முழு முயற்சி எடுத்த, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
‘மிகப் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது’ என, கூறியுள்ள சுஷ்மா சுவராஜ், ஜாதவுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கு உதவியதற்காக, மூத்த வழக்கறிஞர், ஹரீஷ் சால்வேக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

‘பிரதமர் மோடியின் ஆட்சியில், முக்கியமான பிரச்னைகளுக்கு, கடைசி வரை உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என, தன் செய்தியில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார் சுஷ்மா சுவராஜ்.

கட்டப்பஞ்சாயத்து

குல்பூஷண் ஜாதவ் வழக்கில், பாகிஸ்தான் ராணுவ கோர்ட், கட்டப் பஞ்சாயத்து போல் செயல்பட்டுள்ளது, சர்வதேச கோர்ட் உத்தரவின் மூலம் உலகுக்கு தெரியவந்துள்ளது. ஜாதவுக்கு நீதி கிடைத்து, அவர் நாடுதிரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளைமத்திய அரசு எடுக்க வேண்டும்.

குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர், காங்.,

பாக்., பிடிவாதம்

‘உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில்,சர்வதேச கோர்ட் தலையிட முடியாது. அதனால், அதன் தற்போதைய உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது’ என, பாகிஸ்தான் கூறியுள்ளது.
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

ஒரு நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில், சர்வதேச கோர்ட் தலையிட முடியாது. தற்போதைய உத்தரவு, பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பானது என்பதால், இந்த உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது. அதனால், அதை நிறைவேற்ற மாட்டோம்.

இந்தியா, தன் உண்மையான முகத்தை மூடிக் கொண்டு, இந்த பிரச்னையை, சர்வதேச கோர்ட் வரை எடுத்துச் சென்றுள்ளது. ஜாதவ் அளித்துள்ள வாக்குமூலம், இந்தியாவின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும்; விரைவில் அது வெளியிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

LEAVE A REPLY