பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கும் திட்டத்தை சீனா மறுத்தது

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஜிவானி பகுதியில் சீன ராணுவம் ராணுவ தளம் அமைக்க உள்ளது என செய்திகள் வெளியாகியது. இந்த செய்தியை “தேவையற்ற யூகங்கள்,” என சீனா கூறிஉள்ளது. இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் கூட்டாக இணைந்து மேம்படுத்திய ஷபாகார் துறைமுகம் அருகே சீனா ராணுவ தளத்தை கட்டமைக்கிறது என செய்தி வெளியாகி இருந்தது. சீனா கட்டமைத்த க்வாடர் துறைமுகத்திற்கும் நெருங்கிய பகுதியான ஜிவானியில் சீனாவை ராணுவ தளம் அமைக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.

கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக பாகிஸ்தானில் இரண்டாவது வெளிநாட்டு ராணுவ தளத்தை அமைக்க சீனா பேசிவருகிறது என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

இப்போது பாகிஸ்தானில் ராணுவம் தளம் அமைக்க உள்ளது தொடர்பாக வெளியான செய்தியை சீனா மறுத்து உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங், “நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை,” என்றார். பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிரடி நடவடிக்கையை தொடங்கிய நிலையில் அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் சீனாவிற்கு சிறப்பு தளம் வழங்க முன்வந்து உள்ளது என்றெல்லாம் சீன மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. டொனால்டு டிரம்ப் நடவடிக்கையானது பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்றெல்லாம் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

LEAVE A REPLY