பல்கலை கழக மாணவர்கள் பரிமாற்றம் இந்திய குழுவிடம் ஆளுநர் வலியுறுத்து

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக அவர்களின் கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகள் தூதுக்குழுவிடம் வடமக்கான ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியில் கலந்துகொண்ட இந்த குழுவினருக்கும் ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (13) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றபோதே இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் பல்கலைக்கழக மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண மாணவர்கள் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதனையும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.

இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர்வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் மாணவர் பரிமாற்றம் தொடர்பில் இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது இந்திய தூதுரகத்தின் துணைதூதுவர்எஸ். பாலச்சந்திரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.