பல்கலைக்கு வாய்ப்பை பெறாதவர்களுக்கே மூன்றாம் நிலைக்கல்வி – ரிஷாட் விளக்கம்

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் கொழும்பிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில் இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சின் எதிர்கால திட்டங்கள் மற்றும் பணியிலக்குகள் குறித்து அமைச்சர் எடுத்துக்கூறியதுடன், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி முறையாக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாத இளைஞர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பது மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கமென தெரிவித்தார்.

இவ்வாறான இளைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை முறையாக வழங்குவதும் தமது சொந்த வாழ்வாதாரத்தை பெறக்கூடியவர்களாகவும் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதாகவும் அவர்களை உருவாக்குவதும் இந்நாட்டுக்கு மிக முக்கியமான விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே அதன் தாற்பரியத்தை உணர்ந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான கருணாரட்டன பரணவிதான மற்றும் புத்திக பத்திரண அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க மற்றும் அமைச்சின் கீழ்வரும் 12 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள், உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.