பலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை!

பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கையை நுண்கடன்கள் கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நுண்கடன்களைப் பெற்றவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெறாது நிறுத்துமாறும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களை ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருமாறும் அவர் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “நாட்டு மக்களின் ஜீவனோபாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நுண்கடன் திட்டத்தின் காரணமாகவும் இலட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் கடன் சுமையைத் தாங்க இயலாது தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே , இந்தக் கடனை மீளப்பெறாதிருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தக் கடன் திட்டத்தின் காரணமாக குடும்பங்கள், குடும்பப் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

வறிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சலுகைத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். கூட்டுறவு முறைமையின் ஊடாக குறைந்தபட்ச சலுகைகளையேனும் அரசாங்கம் வழங்க வேண்டும். அத்துடன், கடன் வழங்கும் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை உறுதிப்படுத்துவதுடன், கடன் பெறுனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

அத்துடன், கிராமிய மட்டத்திலான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, சிறிய நடுத்தர வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பரந்துபட்ட திட்டமொன்றை வகுத்தல் அவசியமானதாகும்.

அதேவேளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மேலும், தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு நாட்டு மக்களின் பொருளாதார உரிமையைப் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிய பாதையில் பயணிப்பதற்கான வழிவகைககள் வகுக்கப்படவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.