பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – ஸ்ரீநேசன்

மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அவமானமாக இருக்கக்கூடிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை எதிர்ப்போமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், மோசமாக மனித உரிமைகள் மீறுகின்ற சட்டங்களாகும். இதன் நோக்கம் அதிகார வர்க்கம் தங்களது வண்டவாளங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தாங்கள் நினைத்தபடி ஆட்சி செய்வதற்கும் இந்தச் சட்டங்களைக்கொண்டு ஜனநாயகத்திற்குள் ஒரு சர்வாதிகாரத்தைக்கொண்டு வருவதேயாகும். எனவே இவ்வாறான சட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் எதிராகவே செயற்படுவோம்.

கடந்த காலங்களில் குட்டிமணி தங்கதுரை போன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட விதம் அனைவரும் அறிந்ததே. பல சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் எடுத்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

எனவே மனித குலத்திற்கும், நாட்டிற்கும் அவமானமாக இருக்கக் கூடிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிச்சயமாக எதிர்த்தே செயற்படுவோம். அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே செயற்படுவோம்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.