பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அந்த அமைப்புகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அண்டை நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு பயங்கரவாதிகள், பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்தி வருகின்றனர்.

இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார்.

நாட்டின் தலைமைத்தளபதி என்ற முறையில் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றிய டிரம்ப், “பாகிஸ்தான், ஒவ்வொரு நாளிலும் மக்களை கொன்று குவித்து வருகிற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் தந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு பில்லியன் கணக்கில் (பல்லாயிரம் கோடி கணக்கில்) நாம் நிதி அளித்துக்கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம், உடனடியாக வரவேண்டும்” என்று கண்டிப்புடன் கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றபோது, உடன் வந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியுள்ள வார்த்தைகள் மிகவும் கடினமானவை. ஆனால் அந்த வார்த்தைகள் முன்பும் கூறப்பட்டுள்ளன. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?” என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு ஜேம்ஸ் மேட்டிஸ் பதில் அளிக்கையில், “நீங்கள் கேட்கிற கேள்வி எனக்கு புரிகிறது. அதற்கான பதில் கிடைக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என பதில் அளித்தார். மேலும், “இந்த முறை, பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனும் வெளிப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தால், நேட்டோ அல்லாத கூட்டாளி என்ற பாகிஸ்தானின் அந்தஸ்து கேள்விக்குரியதாகி விடும். பாகிஸ்தானுக்கு பண உதவிகள், ராணுவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் பிரச்சினை வரும். பாகிஸ்தான் பாதுகாப்பு நிலைப்பாட்டில் இருந்து ஒரு சிறந்த நீண்ட கால நலன் அடிப்படையில் மக்களுக்காக முடிவு எடுக்க வேண்டும். டிரம்ப் நிர்வாகத்தை பொறுத்தமட்டில் நிபந்தனை அடிப்படையிலான ராஜ்ய உறவைத்தான் பின்பற்றுகிறது” என்று கூறினார்.

மேலும், “பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகள் இடையேயான நம்பிக்கையில் உண்மையிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், நாங்கள் தாக்குதல் நடத்துவோம்” என்று கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தான் குறித்த டிரம்பின் கருத்தை வரவேற்ற அமெரிக்க எம்.பி.க்கள் டெட் போ, கெவின் கிராமர், பென் கார்டின் உள்ளிட்டவர்கள் பாகிஸ்தானின் நேட்டோ அல்லாத கூட்டாளி நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும், நிதி உதவியை குறைக்கவேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.

ஐ.நா. சபையும் தன் பங்குக்கு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் அங்குள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களை நிர்மூலமாக்குவதற்கு உதவுவதற்கு தயார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY