பயங்கரவாதத்தை முழுமையாக கட்டுப்படுத்த பிரதமர் புதிய திட்டம்

பயங்கரவாத செயற்பாட்டை இலங்கையிலிருந்து முழுமையாகக் கட்டுப்படுத்த தகவல் பரிமாற்றுக் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும், இதற்காக புதிய சட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதுவிடயம் தொடர்பில் தற்போது சட்டமா அதிபரிடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை பிரதேசத்திலுள்ள 6 இலட்சம் குடும்பங்களை சமூர்த்தித் திட்டத்தில் இணைக்கும் தேசிய நிகழ்வு, நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “சிலர் என்னிடம் ஏன் அம்பாறைக்குச் செல்கின்றீர்கள் என்று கேட்கிறார்கள். இந்தப் பிரதேசத்தில் இருந்துதான் பயங்கரவாதச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எனவே ஒரு பகுதியில் இந்தத் திட்டத்தை முதலில் ஆரம்பித்துவைத்து, பின்னர் அம்பாறைக்கு செல்லலாம் தானே என்றும் கூறினார்கள்.

ஆனால், எனக்கு இது பிரச்சினையல்ல. இன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலங்கையிலிருந்து நாம் முற்றாக அழித்துள்ளோம். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பையும் முழுமையாக தடை செய்துள்ளோம்.

இனிமேல், எதிர்க்காலத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் இலங்கையில் இடம்பெறாத வகையில் நாம் எமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தபயங்கரவாதச் செயற்பாடுகள் இத்தோடு முடிந்துவிட்டதாக நினைப்பதும் தவறான ஒன்றாகும். இது விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைப் போன்ற ஒன்றாக நாம் கருதவில்லை. அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகவே யுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

ஆனால், இந்த விடயத்தில் ஒரு குழு அழிவடைந்தால் அதன் பின்னணியில் இன்னொரு குழு தோற்றம் பெறக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

இதுபோன்றவர்களுக்கு எந்தவொரு அரசியல் நோக்கமும் கிடையாது. இவர்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்தி அப்பாவி உயிர்களை கொலை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் பிரதான நோக்கமாக இருக்கிறது. இந்த சவாலுக்கு நாம் அனைவரும் தயாராகிக்கொள்ளவேண்டும்.

இவற்கைக் கட்டுப்படுத்த இலங்கை சட்டத்தில் போதியளவு அதிகாரங்கள் இல்லை என்பதை நான் மீண்டும் கூறிக்கொள்கிறேன்.

அவசரகாலச் சட்டத்தை தளர்த்தும் முன்னர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைது செய்ய எமக்கு புதிய சட்டக் கட்டமைப்பொன்று தற்போது தேவைப்படுகிறது.

இது தொடர்பில் நான் தற்போது சட்டமா அதிபருடனும் கலந்துரையாடியுள்ளேன். அவரும் இதனை ஆராய்வதாக கூறியுள்ளார்.

அதேபோல், பயங்கரதவாதத்தை அழிக்க தகவல் கட்டமைப்புக்களும் உறுதியாக இருக்க வேண்டும். தற்போது இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகள் இல்லை.

சர்வசே பொலிஸாருடனான இணைப்பு இன்னும் இங்கு ஸ்திரப்படுத்தப்படவில்லை. இவற்றின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொண்டால்தான் எமக்கான சவால்களை முறியடிக்க முடியுமாக இருக்கும். ஐ.எஸ். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழித்து விட்டோம் எனினும், இதுதொடர்பில் நாம் திருப்தியடைய முடியாது. இவர்களின் செயற்பாடு இத்தோடு முடிவடையாது

புலிகள் அமைப்பினரைப் போன்றவர்கள் அல்ல பயங்கரவாதிகள். இவர்களுக்கு கொள்கை கிடையாது தற்கொலைத் தாக்குதுதல் ஊடாக அப்பாவி உயிர்களை கொலை செய்வதுமட்டும்தான் இவர்களின் நோக்கம். இதனைக் கட்டுப்படுத்த பலமான சட்டக்கட்டமைப்பு அவசியம் புதிய சட்டம் கொண்டுவருவது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.