பன்முக ஆளுமைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அத்திவாரமாக அமைந்துள்ள பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுனரும், சைவப் பெருவள்ளலாருமான சேர். பொன். இராமநாதனனின் தொன்னூறாவது குருபூசை தினவிழா இன்றாகும் நவம்பர் 21 ஆந் திகதி . அதனையொட்டி இச் சிறப்புக் கட்டுரை வெளியாகிறது.

கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன்

லங்கையின் ஆன்மீகப் புலமைப் பாரம்பரியத்தை உலக அரங்குக்கு இட்டுச் சென்றவர்களுள் சேர்.பொன். இராமநாதனுக்குத் தனியிடமுண்டு. அத்துடன், இலங்கை மணித்திருநாட்டில் சைவத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளம், பண்பாடு, அரசியல், கல்வியியல், காலனித்துவ விடுதலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை திரிகரண சுத்தியோடு முன்னெடுத்து அருந்தொண்டாற்றிய பெருந்தலைவராகவும் திகழ்ந்தவர் அவர்.

அந்நியராட்சியின் கீழ் பாமரராய், விலங்குகளாய், கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமையராய் நாலமது தமிழரென வாழ்ந்திருந்த சூழலில் எம்மை மீட்டெடுக்க வந்த பெரியார்களில் ஆறுமுகநாவலர் முதன்மையானவர். நூற்பதிப்பு, உரை, துண்டுப்பிரசுரம், பாடசாலை நிறுவுதல், பாடநூலாக்கம், நூலாக்கம், பிரசங்கம், சமூகப்பணி என பல்தளங்களில் இயங்கி சுதேசத் தமிழ், சைவப்பண்பாட்டை மீட்டெடுத்த நாவலர் தனக்குப்பின் சைவத்தமிழ்ச் சமூகத்துக்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுத்த மாமனிதரே சேர்.பொன்.இராமநாதன்.

நாவலரின் தீர்க்கதரிசனம் பொய்க்கவில்லை. பொன்னம்பல முதலியாருக்கும், செல்லாச்சி அம்மைக்கும் பிறந்த இரண்டாவது மகனே இராமநாதன் ஆவார். கொழும்பு றோயல் கல்லூரி, சென்னை பிரெசிடென்சி கல்லூரிகளில் கற்று வழக்கறிஞராகத் திகழ்ந்தவர்.

காலனித்துவ அரசில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழிப் புலமையுள்ளவராகவும் இன ஐக்கியத்துக்காகப் பாடுபட்டு உழைத்தவராகவும் சேர்.பொன். இராமநாதன் அடையாளப்படுத்தப்படுகிறார். பௌத்த பிரம்மஞான சபையில் பொருளாளராகப் பதவி வகித்ததும் அதையொத்த சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகத் திகழ்ந்ததும் இதற்குத் தக்க உதாரணங்களாகும்.

தேசத்தின் விடுதலைக்கு இன ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காகப் பாடுபட்டதோடு, அதற்காகவே வாழவும் விரும்பினார். சிங்களவரும் தமிழரும் இனவேறுபாடு அற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர். இரு இனத்தவராலும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த் தலைமை இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத் தலைவராக விளங்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் சேர். பொன். இராமநாதன் பற்றிக் குறிப்பிடுகையில், “இலங்கையின் தவப்புதல்வர்களில் ஒருவர் சேர். பொன். இராமநாதன் என்பதில் என்றும் எவர்க்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக இலங்கையின் அரசியல் வானில் ஈடு இணையற்று பிரகாசித்த இராமநாதன் அவர்கள் இவ்வுலகிலே தம்புகழை நிறுவிச் சென்ற பெருமக்களுள் ஒருவர் என்பதனை ஊரும் உலகமும் ஒப்புக்கொண்டுள்ளன. அன்னாரின் நினைவாக அண்மையில் முத்திரை வெளியிட்டும், அன்னார் தூர திருஷ்டியுடன் நிறுவிய பரமேஸ்வராக் கல்லூரியை இலங்கைப் பல்கலைக்கழக யாழ் வளாகத்தின் நடுமையமாகப் பிரகடனம் செய்தும், அங்கே வளாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டும் அரசு அன்னாருக்குச் சிறப்புச் செய்திருப்பதை நாம் காண்கிறோம். இராமநாதன் அவர்கள் தேசிய பெருமக்கள் வரிசையில் நிலையான இடம் பெற்றிருப்பதை இத்தகைய பாராட்டுச் செயல்கள் தொடர்ந்து நினைவூட்டுவனவாய் உள்ளன” என்றார்.

சேர். பொன். இராமநாதன் அவர்களால் ஆண்களின் கல்வி மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகப் பெருஞ் சிறப்புடன் மிளிர்கின்றது. அவர் கனவு கண்ட இந்துப் பல்கலைக்கழகம் இதுவரை உருவாகாது விடினும் இந்துநாகரிகம், சைவசித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய கற்கைப் புலங்களை உள்ளடக்கிய இந்துக் கற்கைகள் பீடத்தைக் கொண்ட இலங்கையின் தனித்துவம் மிக்கதொரு பல்கலைக் கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திகழ்கின்றமை சிறப்பானதாகும்.

நாகரிகம், பண்பாடு, சைவசித்தாந்தம், சங்கத மொழியாகிய வடமொழி யோகநெறி என்பன கல்லூரிகளில் கற்பிக்க வேண்டும் என்பது அவரின் இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியத்தை இந்துக்கற்கைகள் பீட புலங்கள் நிச்சயம் நிறைவேற்றும்.

சேர். பொன். இராமநாதன் அவர்கள் சொல்லுக்கும்,செயலுக்கும் இடையில் வேறுபாடற்றவர். செல்வந்தர், கற்றவர், சட்டத்தரணி மற்றும் அரசியல் செல்வாக்கு, பதவி எனப் பல் அடையாளங்களைப் பெற்றிருந்தும் மக்களோடு மக்களாக நின்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர்களுக்காகப் பெரும்பணியாற்றிய பெருமகனார்.

இலங்கையின் கல்விப் பாரம்பரியத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால் காலனித்துவத்துக்கு முற்பட்ட – குறிப்பாகப் 19 ஆம் நூற்றாண்டுக்கு முன் இலங்கைப் பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தனர் எனச் சொல்ல முடியவில்லை. பௌத்த பிக்குணிகளே கல்வி கற்ற பெண்களாக இருந்தனர். தமிழ்ச் சூழலில் பெண் புலவர்கள் எவரையும் அறிய முடியவில்லை. சுதேசப் பண்பாட்டியலில் கல்வியறிவு பெற்றிருந்தும் வீட்டு எல்லையைத் தாண்ட முடியாத சூழல் காணப்பட்டிருக்கலாம்.

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கைக்கு வருகைதந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தம் சமயத்தைப் பரப்புவதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர். அவற்றின் வழி மதம் மாற்றச் செயற்பாடு இடம்பெற்றாலும் கிறிஸ்தவ சமய ஈடுபாட்டை மேம்படுத்தவும் உறுதிபட நிலைநிறுத்தவும் கட்டிறுக்கமான செயற்பாடு தேவைப்பட்டது. அதற்காகப் பெண் கல்வி என்னும் உபாயத்தைக் கண்டறிந்தனர். சுதேச சமயப் பெண்களைத் தம் சமயத்துக்கு மாற்றி கல்வியறிவூட்டி கிறிஸ்தவத்தை உணர்வு ரீதியாக ஊட்டுவதனூடு குடும்பத்தில் அதனை வளர்த்தெடுக்க முடியும் என நம்பினர். அவ்வாறே செயற்படுத்தினர்.

இவற்றை அவதானித்த சேர். பொன். இராமநாதன் “ஆணொடு பெண்ணும் சரிநிகர் சமானமாக” வாழ வழிவகுத்தார். சுதேச சைவ மகளிர் தம் பண்பாட்டுச்சூழலில் கல்வி கற்க ஒரு பாடசாலையை நிறுவ விரும்பினார். அதன் பயனாக 1913ஆம் ஆண்டு ஜனவரி 20 இல் மருதனார்மடத்தில் மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதுவே இந்நாளில் இராமநாதன் மகளிர் கல்லூரி எனலாயிற்று.

அவர் முதன்முதல் உருவாக்கிய கல்லூரி இம்மகளிர் கல்லூரியே என்பதன் வழி பெண்களின் கல்வியறிவின் அவசியத்தை உணர்ந்து செயலாற்றியமை கவனிக்கத்தக்கதாகிறது. வீட்டைவிட்டு வெளிவராத பண்பாட்டின் பெயராலான, அவ்விறுக்கமான சூழலில் வீட்டிலிருந்து கற்பதற்கு சமமான விடுதிகளை உருவாக்கினர். சைவ இலக்கியங்களையும், சுதேச நூல்களையும் பாடக் கலைத்திட்டத்தில் இணைத்ததோடு ஆங்கில அறிவையும் பெற வழிசமைத்தார்.

கல்வி திரிகரண சுத்திக்குரியதாக இருக்க வேண்டும் எனக் கருதிய அவரின் எண்ணம் அக்கல்லூரியின் மகுட வாசகம் ஆகிற்று. சைவமும் தமிழும் ஆங்கிலமும் பாடவிதானமாயிற்று. குடும்ப வாழ்க்கைக்கு உதவக்கூடிய தையல், சமையல், சுகாதாரமும் கற்பிக்கப்பட்டது. கல்லூரியில் வழங்கப்பட்ட கல்வி, கல்விக் கோவை விதிகளையும் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரித் தேர்வுக்குரியதாகவும் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குரியதாகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அன்றைய சூழிநிலையில் இவற்றைக் கற்பிக்கக்கூடிய பெண் ஆசிரியர்களைப் பெறுவதிலும் சிரமம் இருந்துள்ளது. இதனால் இராமநாதன் கல்லூரி வளாகத்திலேயே பெண்கள் ஆசிரியைப் பயிற்சிக் கலாசாலையையும் ஆரம்பித்துத் திறம்பட நடாத்தியுள்ளார். இக்கலாசாலையில் இருந்து வந்தவரே ஈழத்து முதல் பெண்மணியக்காரர், உலகறிந்த முதல் பெண் பிரசங்கி எனப் பலவாறு வருணிக்கப்படுகின்ற சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஆவார்.

சைவ மகளிர் கல்வி பெறவும், தொழில் வாய்ப்புக்களைப் பெறவும் அதனூடான அனைத்துச் சுதந்திரங்களையும் பெற்றுச் சுகிக்கவும் உழைத்த முன்னோடி சேர். பொன். இராமநாதன். இன்றைய சூழலில் பெண்கள் பெரும்பெரும் பதவிகளை அலங்கரிக்கவும் ஆட்சிசெய்யவும் நுண்மதியினராய் தேசத்தைக் கட்டியெழுப்பவும் சைவத்தமிழ்ச் சமூகத்தை ஆற்றுப்படுத்திய தீர்க்கதரிசி இராமநாதன் ஆவார்.

அவரைச் சைவத்தமிழ்ச் சமூகம் மிகுந்த நன்றியுடன் என்றென்றும் நினைவு கூருகின்றது. இன்று உலக அரங்கில் முதன்மையுற்றிருக்கும் யோகக்கலை பற்றிய பிரக்ஞைக்கு அன்றைக்கே முழு ஆதரவு நல்கியவர் சேர். பொன். இராமநாதன். யோகம், தியானம் என்பவற்றில் தலைசிறந்து விளங்கியவர். பாடசாலைக் கலைத்திட்டத்தில் அதனை இணைத்து ஆன்மீகப் பயிற்சியாக வழங்க வழி சமைத்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சேர். பொன். இராமநாதனின் ஞானக்குருவாக தஞ்சாவூரைச் சேர்ந்த அருட்பரானந்த சுவாமிகள் விளங்கினார். இவரின் அருட்பார்வையினால் இவர் தவயோகியாகவே மாறிவிட்டார். பகவத்கீதை கூறும் கருமயோகத்தின் வழித்தடத்தில் இவரின் பிற்கால வாழ்க்கை அமைந்து விட்டது. தியான யோக சாதனைகளில் தமது நேரத்தைக் கழித்தார் இவரின் சீரிய யோக சிந்தனைகளை நினைவு படுத்துவதற்காகவே இந்துக்கற்கைகள் பீட வரைபில் யோகநெறி ஒரு தனித்துறையாக அமைய சிபார்சு செய்யப்பட்டது. அதனை இந்துக்கற்கைகள் பீடத்தினர் விரைவில் நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்மீகத்தை வெறும் பயிற்சிச் சொல்லலங்காரமாகக் கைக்கொள்ளாது வாழ்வியல் தத்துவமாக உணர்ந்து, வாழ்ந்து காட்டியவர் சேர். பொன். இராமநாதன். கிறிஸ்தவ, பௌத்த சமய தத்துவங்கள் உள்ளிட்ட பல்வகைமை அறிவு வாய்க்கப்பெற்ற இவர், பிரசங்கித்த ஆன்ம கலாசாரம் (Soul Culture) எனும் நூலில் இடம்பெறும் ‘ஞானத்திறவுகோல்’ (Key of Knowledge) எனும் பகுதி ‘எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருப்பதுடன் சைவ சித்தாந்த ஞானத்தின் அகண்ட வியாபகப் பண்பினைத் தெளிவுறுத்தி நிற்கிறது’ என ‘கர்மயோகம்’ தந்த பரமேஸ்வராக்கல்லூரி ஆசிரியரான மு.ஞானப்பிரகாசம் கூறி நிற்பது சுட்டியுரைக்கத்தக்கது.

சேர். பொன். இராமநாதன் சைவசித்தாந்த வித்தகராக விளங்கினார். அவரிடம் காணப்பட்ட சைவசித்தாந்த புலமையின் காரணமாகவே சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முதல் மாநாட்டுக்கு (1906) இவர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். சுவாமி விவேகானந்தர் வேதாந்த மெய்யியலை அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகளில் பரப்புரை செய்தது போன்று சேர். பொன் இராமநாதன் சைவசித்தாந்த மெய்யியலை மேலைத்தேச நாடுகளில் பரப்புரை செய்த பெருமைக்குரியவராக விளங்கினார்.

இந்துக்கற்கைள் பீடத்தில் இடம்பெற்றுள்ள சைவசித்தாந்தத்துறை அவரின் மிகுவிருப்பமான சிந்தனைக்கு பெருமை சேர்ப்பதாக அமைகின்றது. இலங்கையில் சைவசித்தாந்தம் என்ற பெயரில் ஒருதுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டும் அமைந்திருப்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும், சேர். பொன். இராமநாதனுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.

சேர். பொன். இராமநாதன் பன்மொழிப் பாண்டித்தியம் உடையவராக விளங்கியதை அவரது நூலாக்கப்பணிகள், மொழி பெயர்ப்புப்பணிகள் எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக, தமிழ் இலக்கண வித்தகராகத் திகழ்ந்தமையை அவரின் செந்தமிழ் இலக்கணம் எனும் நூல் புலப்படுத்தி நிற்கின்றது. வடமொழியில் புலமைத்துவமாகத் திகழ்ந்ததை அவரின் பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும், விருத்தியுரையும் எனும் நூல் மூலம் அறியலாம்.

இலங்கையில் அமைந்து விளங்கும் திராவிடக் கட்டிடக்கலை மரபில் அமைந்துள்ள கோயில்களுக்கு உதாரணமாக கொழும்பு கொச்சிக்கடையில் கட்டப்பட்ட பொன்னம்பலவானேஸ்வரர் கோயில், யாழ்ப்பாணத்து பரமேஸ்வராக்கல்லூரியில் காணப்படும் இராமநாதேஸ்வரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை என்று பேராசிரியர் கா. இந்திரபாலா குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கொழும்பில் முற்றிலும் கருங்கல்லினால் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு கோயில் பொன்னம்பலவானேஸ்வரர் கோயில் ஆகும். இக்கோயில் 1856 இல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியாரால் கட்டப்பட்டது. பின் இவரின் மைந்தன் சேர். பொன். இராமநாதன் அவர்கள் சிறப்புற கட்டிமுடித்தார். இவர் தமிழகத்தில் முருகனுக்கு அமைத்த கோயிலாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் விளங்குகின்றது.; இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் கோயில் அமைத்த சிறப்புக்குரியவராக சேர். பொன். இராமநாதன் விளங்குகின்றார்.

பரமேஸ்வராக் கல்லூரியின் இயக்குநர் சபையின் மேனாள் தலைவர் பிரபல சட்டத்தரணி எஸ். ஆர். கனகநாயகம் 1976 இல் சேர். பொன். இராமநாதன் பற்றிக் கூறிய கருத்துக்களையும் இங்கு குறிப்பிடலாம். “ஈழ மாதாவின் மாபெரும் புதல்வரான இப்பெரியார் 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்நாட்டினை உன்னத நிலையில் வைத்திட புரிந்த பகீரத பிரயத்தனங்களை இன்றைய தலைமுறை மறந்துவிடலாகாது. சட்டநிரூபண சபைக்கு உள்ளேயும், வெளியேயும் நாட்டுக்காகவும், தமது மதத்துக்காகவும் அவர் நிலைநிறுத்திய சேவைச் சாதனைக்கு ஈடேயில்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்போரிலும், வாழ்ந்து மறைந்து போனவரிலும், அவருக்கு இணைவு காண்பது இயலாது. அவர் சிறந்த நியாயவாதியாகவும், ஆற்றல் நிறைந்த சொற்போர் நிபுணராகவும், பண்பட்ட உன்னத நாவல்லோராகவும், திறமைசால் நிர்வாகியாகவும், இவையாவிலும் மேலாக மிக்குயர்ந்த மெய்யியலாளராகவும், பிரமஞானியாகவும் விளங்கினார்” என்று குறிப்பிட்டுள்ளமை சிந்திக்கத்தக்க விடயமாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அத்திவாரமாக அமைந்துள்ள பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுனரும், சைவப்பெருவள்ளலாருமான சேர். பொன். இராமநாதனனின் தொன்னூறாவது குருபூசை தினவிழா இன்றாகும். பன்முக ஆளுமை கொண்ட சேர். பொன். இராமநாதன் அவர்களின் குருபூசை தினவிழா, சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை மற்றும் சீமாட்டி லீலாவதி இராமநாதன் அவர்களின் நினைவுப் பேருரை என்பவற்றை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருடாவருடம் நிகழ்த்துவது மட்டற்ற மகிழ்வைத் தருகின்றது. இவையாவற்றுக்கும் மேலாக சேர். பொன். இராமநாதன் அவர்களின் திருநாமத்துடனேயே அவைக்காற்றுகைக் கலைகளுக்கான பீடம் அமையவிருப்பதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.