பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுக்கும் இடையில் கலந்துரையாடல்

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தல், 2019ஆம் ஆண்டின் புதிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் ரிஸாம் ஹமீட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவட்ட ரீதியில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் சிறிய மாற்றம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தில் ஒரு உறுப்பினரைக் குறைத்தும் பதுளை மாவட்டத்தில் ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மாவட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புத் தயாரிப்புப் பணிகள் முற்றுப் பெற்றிருப்பதாகவும் புதிதாக இரண்டு இலட்சத்தி 70 ஆயிரம் பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.