பணத்தை தராமல் இருந்துவிட்டு இப்போது பொய்யா கூறுகிறீர்கள்! மகிந்தவை எச்சரிக்கும் விக்னேஸ்வரன்

மத்திய அரசாங்கம் மாகாண அரசுக்கு பணத்தினை தராமல் இருந்துவிட்டு, இந்தியாவில் பிரதமர் மகிந்த பொய்யான தகவல்களை கூறியிருக்கிறார் என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் இந்தியா பயணமான பிரதமர் மகிந்த, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய போது வடக்கின் முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் நிதிகளை மீண்டும் திருப்பியனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள விக்னேஸ்வரன்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.

ஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது.

ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.