படப்பிடிப்பில் அஜித்துக்குக் காயம்

‘வலிமை’ படப்பிடிப்பின்போது அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கரோனா அச்சுறுத்தலால் ‘வலிமை’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தாலும், நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. இறுதியில், நடிகர்களின் தேதிகள் கிடைத்தவுடன், ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியது ‘வலிமை’ படக்குழு.

இதில் அஜித், ஹியூமா குரோஷி ஆகியோர் பங்கேற்ற சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கினார்கள். பைக், கார்கள் வைத்து சேஸிங் காட்சிகள் இடம்பெற்றன. இதில் ஒரு காட்சியில் பைக்கை வேகமாக வந்து நிறுத்தும்போது சரிந்துள்ளது. இதில் அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தக் காயம் ஏற்பட்ட, அடுத்த சில மணித்துளிகளிலேயே அடுத்த காட்சியில் நடித்துள்ளார் அஜித். அவருக்குக் காயம் ஏற்பட்டதால், படக்குழுவினர் சென்னை திரும்பவில்லை. திட்டமிடப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கிய பிறகே சென்னை திரும்பினர்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பும் ஹைதராபாத்திலேயே தொடங்க உள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும், இசையமைப்பாளராக யுவனும் பணிபுரிந்து வருகிறார்கள்.