படத்தால் ரசிகருக்குக் கிடைக்கும் அனுபவமே வெற்றியின் அளவுகோலாக..

வசூலை வைத்து ஒரு படத்தின் வெற்றியை மதிப்பிடக் கூடாது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி.

கடந்த புதன் அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நடிகர் சூர்யா கூறியதாவது:

சூரரைப் போற்று கதையின் மீது இயக்குநர் சுதா கொங்கரா மிகவும் ஆர்வமாக இருந்தார். இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திய நிஜ கதாநாயகனின் கதை அது. இதன்மூலம் ஒரு நடிகராக எனக்குப் புதிய உலகத்தை அளித்துள்ளார் சுதா கொங்கரா. இன்றைய திரைப்படக் கதைகளுக்கு பிராந்திய எல்லைகள் இருப்பதில்லை. இந்தக் கதை இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன்.

வசூலை வைத்து ஒரு படத்தின் வெற்றியை மதிப்பிடக் கூடாது என்று எப்போதும் நான் எண்ணுவேன். படத்தின் உள்ளடக்கமும் அது ஏற்படுத்திய தாக்கமும் தான் மதிப்பிடப்பட வேண்டும். ஒரு படம் எவ்வளவு வசூலைக் குவிக்கிறது என்பதற்குப் பதிலாகப் படத்தால் ரசிகருக்குக் கிடைக்கும் அனுபவமே வெற்றியின் அளவுகோலாக இருக்க வேண்டும். ஓடிடி தளங்கள் அதைச் சாத்தியமாக்கியுள்ளன என்றார்.