பகிரங்கமாக அவமதிக்கும் ராஜபக்ச தரப்பு! ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பகிரங்கமாக அவமதிப்பதோடு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் போக்காகவும் அமைந்துள்ளதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகுவது தொடர்பில் அவர் வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்திலிருந்து விலக இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து விசாரணை ஆணைக்குழுவை அமைத்தல், காணாமல்போனவர்களை கண்டறிய அலுவலகம் அமைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் ஆகியவற்றை உடனடியாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை அரசாங்கமும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தது. எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முழுமையாக செயற்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷ அரசாங்கம் அந்தத் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பகிரங்கமாக அவமதிப்பதோடு, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் போக்காகவும் அமைந்துள்ளது.

எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும், உலக நாடுகளும் இலங்கை அரசின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.