நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மகிந்தவைச் சந்திக்காதது ஏன்?

நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹகென் இறுக்கமான நிகழ்ச்சி நிரல் காரணமாக, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, சந்திக்கவில்லை என்று நோர்வே தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்திருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹகென் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவில்லை என்று, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட நோர்வே தூதரக பேச்சாளர்,

“கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சுமார் 7 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவிக்கவும், வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பகுதிகளைப் பார்வையிடவுமே குறுகிய பயணமாக, நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் கொழும்பு வந்திருந்தார்.

அவரது வருகை, வடக்கிற்கான பயணத்துடன் தொடர்புடையது, அவரது நிகழ்ச்சி நிரல் மிகவும் இறுக்கமானதாக இருந்தது.

இது, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் தவிர, எதிர்க்கட்சித் தலைவரையும் ஏனைய அரசியல் தலைவர்களையும், சந்திக்கத் தடையாக அமைந்தது.” என்று கூறியுள்ளார்.