நொவம்பர் 16 அல்லது 23இல் அதிபர் தேர்தல் – பீரிஸ் ஆரூடம்

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் நொவம்பர் 16 ஆம் நாள் அல்லது 23ஆம் நாள் நடக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக, அந்தக் கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று நள்ளிரவுக்குப் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எந்த நேரத்திலும் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு அதிகாரம் உள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்தல் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

நொவம்பர் 10ம் நாளுக்கும், டிசெம்பர் 8ஆம் நாளுக்கும் இடையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் சனிக்கிழமை ஒன்றில் நடத்தப்படும் என்பதால், நொவம்பர் 16 ஆம் நாள் அல்லது 23ஆம் நாள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

கோத்தாபய ராஜபக்சவை ஏற்கனவே வேட்பாளராக அறிவித்துள்ளோம். எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.