நீதிமன்றத் தீர்ப்பின் படி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் – ரவி

நீதிமன்றத் தீர்ப்புடன் பெரும்பான்மையை நிரூபித்து, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு மீதான விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அரசியல் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் எடுத்தத் தீர்மானமும் நாளுக்கு நாள் பலமடைந்துக் கொண்டு வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்புடன் பெரும்பான்மையை நிரூபித்து, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என நினைக்கிறோம். நாம், தேர்தலுக்கு செல்ல ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், அனைத்தும் சட்டரீதியாகவும் அரசமைப்புக்கும் உட்பட்டு இடம்பெற வேண்டும் என்றே நினைக்கிறோம்.

சபாநாயகரின் கதிரையில் சென்று ஒரு குழு அமர்ந்து கொண்டு, காட்டு மிராண்டித் தனமாக செயற்படுவதாயின், எதற்கு நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது?

அவர்கள் நாடாளுமன்றில் அமைதியில்லை எனவே, தேர்தலை நடத்துமாறும் கோருகிறார்கள். இதற்காகவா மக்கள் ஆணை வழங்கினார்கள்?” எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.