நீதித்துறையின் அதிகாரங்கள் கோட்டாபயவின் கரங்களுக்குச் செல்லும்! சட்டத்தரணி இராஜ் டி சில்வா தகவல்

20வது திருத்தத்தின் நகல்வடிவம் காரணமாக மக்களின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தனவின் சட்டத்தரணி இராஜ் டிசில்வா தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அரசமைப்பிற்கான எந்த திருத்தம் மூலமும் மக்களின் இறைமைக்கும் பௌத்தத்தின் முன்னுரிமைக்கும் ஆபத்து ஏற்பட அனுமதிக்ககூடாது.

20வது திருத்தம் காரணமாக மக்களின் இறைமை இழக்கப்படும், அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்படும், நாடாளுமன்றம் நீதித்துறையின் அதிகாரங்கள் அற்றுப்போகும்.

நகல்வடிவின் மூன்றாவது முதல் 57 வரையான வாக்கியங்கள் இலங்கையின் அரசமைப்பிற்கு எதிரானவையாகும். இதன்காரணமாக மக்களின் இறைமை பறிபோகும்.

நகல்வடிவம் முற்றுமுழுதாக இலங்கையின் அரசமைப்பின் அடிப்படை கட்டமைக்கு எதிரானது. நகல்வடிவம் நாடாளுமன்றத்தினதும் நீதித்துறையினதும் அதிகாரங்களை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைக்கின்றது.

இந்த நகல்வடிவின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி பொறுப்புக்கூறுதல் அரசாங்கத்தின் மூன்று முக்கிய பிரிவுகள் மத்தியிலான சமநிலை என்பன காணாமல்போகும். இது அதிகாரத்தை பகிர்வதற்கு எதிரான விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.