நிழற்போரில் இருந்து விடுபடுமா இலங்கை?

இலங்கையின் அரசியல் உறுதிப்பாட்டுக்கு இராணுவத்தை மறுசீரமைக்க வேண்டியது முக்கியமான ஒரு தேவையாக மாறியிருக்கிறது.

முப்பதாண்டு போருக்குள் இருந்த இந்த இராணுவக் கட்டமைப்பு தனியே போர் வெற்றி ஒன்றை மட்டும் இலக்கு வைத்தே கட்டமைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் உயிர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், புலிகளை அழிப்பதிலும், தமது வெற்றியை உறுதிப்படுத்துவதிலுமே குறியாக இருந்தது இந்த இராணுவக் கட்டமைப்பு.

போருக்குப் பின்னரும் கூட, மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இந்த இராணுவக் கட்டமைப்பு, ஆதிக்க மனோபாவத்துடன் தான் வளர்க்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அவ்வாறானதொரு தோரணையில் செயற்பட முடியாத நிலை இராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்துக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுக்க அரசாங்கமும் விரும்பவில்லை.

போர்க்காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம், வெளிப்படையான போர்களையும் நடத்தியது, மறைமுகமான நிழல் யுத்தங்களிலும் ஈடுபட்டது.

ஒரு புறத்தில், புலிகளும், அரசாங்கமும் பேசிக் கொண்டிருக்க, இருதரப்பு புலனாய்வுப் பிரிவுகளும் மறைமுக மோதல்களிலும், தயாரிப்புகளிலும் ஈடுபட்டதை யாரும் மறந்து விட முடியாது.

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் பல சமயங்களில், முடங்கிப் போகவும், சில சமயங்களில் முறிந்து போகவும், இந்தப் புலனாய்வுப் போர் காரணமாக அமைந்தது.

திட்டமிட்ட தாக்குதல்களின் மூலம், இருதரப்புக்கும் இடையில் சந்தேகங்களையும், அவநம்பிக்கைகளையும், ஏற்படுத்துவதில், இத்தகைய புலனாய்வு யுத்தம் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக முன்னர் அரசாங்கம் கூறிய பல தாக்குதல்கள், அல்லது அவர்கள் மீது பழிபோடப்பட்ட பல சம்பவங்களின் பின்னால், யார் இருந்தார்கள் என்பது பற்றிய சில தகவல்கள் இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

அதுபோலவே, விடுதலைப் புலிகளும் கூட இத்தகைய புலனாய்வுப் போரில் ஈடுபட்டனர் என்பதை மறுக்க முடியாது.

எவ்வாறாயினும், அரசியல் ரீதியாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு, இராணுவ ரீதியான காரணிகளும், புலனாய்வுக் காரணிகளும் பலவேளைகளில் தடையாக இருந்தன என்பது கடந்த கால வரலாறு.

அரசியல் தலைமைகள், விடுதலைப் புலிகளுடன் பேச முனைந்த போதெல்லாம், பாதுகாப்புத் தலைமைகள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கவில்லை.

அதற்குக் காரணம், அவர்களின் சிந்தனை, எதிர்மறையானதாகவே இருந்து வந்தது தான்.

இந்தநிலையானது கடைசியில், போரை உச்சநிலைக்கு கொண்டு சென்றதுடன், அத்தகைய பாதுகாப்புத் தலைமைகள் எதிர்பார்த்தவாறு விடுதலைப் புலிகளைத் துடைத்தழிப்பது வரை சென்று முடிந்திருக்கிறது.

இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, ஆயுதப் போராட்டமும் இல்லை, ஏன் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க யாரும் தயாராகக் கூட இல்லை. ஆனாலும், தமிழர்கள் விடயத்தில், கடந்த மூன்றுதசாப்தமாக கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்புக் கொள்கையை மாற்றிக் கொள்ள படைத்தலைமைகள் தயாராக இல்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கில் இருந்து படைகளை விலக்குதல், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி காணிகளை ஒப்படைத்தல் என்று எல்லாவற்றுக்கும் இந்த இறுக்க நிலையே தடையாக இருக்கிறது.

உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவத்துடன் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அது அரசாங்கத்தை விட, இராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது.

உண்மையும் அது தான். வடக்கிலோ கிழக்கிலோ, இராணுவத்தை மீறி எதையும் செய்ய முடியாத நிலை இன்றும் உள்ளதென்பதை மறுக்க முடியாது. அரசியல் ரீதியான முடிவுகளை கண்மூடித்தனமாக எடுக்க முயன்றால், இராணுவத்தின் தலையீடும், கையும் ஓங்குகின்ற நிலையை ஏற்படுத்தும் என்ற அச்சம் அரசியல் தலைமைகளுக்கு உள்ளது.

அது, இராணுவப் புரட்சி ஒன்றுக்கு வழி கோலலாம். இந்த விடயத்தில் அரசாங்கம் நிதானமாக செயற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். அதற்காக தற்போதைய அரசாங்கம் முற்றிலும் உண்மையானது, நியாயமாக- அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்று அர்த்தமில்லை.

அரசியல் தலைமைகள் எடுக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட முடிவுகளைக் கூட, நின்று நிதானித்தே எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது என்பதே அதன் அர்த்தம்.

இப்படியான சிக்கலில் இருந்து அரசாங்கம் விடுபட்டால்தான், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும், நிலையான அமைதியை ஏற்படுத்தவும் முடியும்.

இல்லாவிட்டால், அரசியல் தலைமைக்கும், இராணுவ அல்லது புலனாய்வுக் கட்டமைப்புகளுக்கும் இடையிலான இழுபறி யுத்தத்துக்குள் நாடு மெல்ல மெல்லா நகர நேரிடும்.

இதற்குச் சிறந்த உதாரணம் பாகிஸ்தான். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், அரசுக்குக் கட்டுப்படாததாகவே, இராணுவமும், புலனாய்வு அமைப்புகளும் இருந்து வருகின்றன.

பாகிஸ்தானில் அடிக்கடி இராணுவ ஆட்சி ஏற்பட்டாலும், அவ்வப்போது ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்களும் தோன்றுவதுண்டு. ஆனாலும், அத்தகைய ஜனநாயக அரசியல் தலைமைகளால் இராணுவத்தையோ, புலனாய்வு அமைப்புகளையோ கட்டுப்படுத்த முடிவதில்லை.

1999ஆம் ஆண்டு இந்திய கட்டுப்பாட்டில் உள்ள கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகள் ஊடுருவியது அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்குத் தெரியாது. அந்த ஊடுருவலுக்கு உத்தரவிட்டவர் அப்போதைய இராணுவத் தளபதியும், பின்னர் நவாஸ் ஷெரீபின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவ ஆட்சியை நடத்தியவரான ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தான்.

இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், நவாஸ் ஷெரீபும் பேச்சுக்களை நடத்தி கட்டித் தழுவிவிட்டு வர இந்த ஊடுருவல் நடந்தது. அது இருநாடுகளுக்கும் இடையில் பெரும் போராக, வெடித்தது.

அதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய இடைவெளியும் சந்தேகமும் ஏற்பட்டது.

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுப் பிரிவே இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டுகிறது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது எப்போதும் கொதிநிலையாகவே இருக்கிறது.

இந்த நிலையில், அண்மையில் திடீரென இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பாங்கொக்கில் சந்தித்துப் பேசினர். அதையடுத்து. இந்திய வெளிவிகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்று பேச்சு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 25ஆம் திகதி – கிறிஸ்மஸ் தினத்தன்று, பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் திடீரெனப் போய் இறங்கினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இது இருதரப்பு உறவுகளை சுமுகமாக்கும் முக்கிய நகர்வாகக் கருதப்பட்டது.

லாகூர் சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் இராணுவம் அணிவகுப்பு மரியாதை அளிக்கவில்லை. அந்த நாட்டின் விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதையே அளிக்கப்பட்டது.

அதற்குக் காரணம் பாகிஸ்தான் இராணுவம் மீதான நம்பிக்கையின்மை தான்.

கொழும்பில் ராஜீவ்காந்திக்கு ஏற்பட்ட நிலை லாகூரில் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான்.

நரேந்திர மோடி லாகூர் சென்று திரும்பிய சில நாட்களிலேயே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படைத் தளம் மீது தீவிரவாதிகளால் தாக்குதல், நடத்தப்பட்டது.

இந்திய விமானப்படையின் மிக்–21 போர் விமானங்களும், எம்.ஐ- -25, எம்.ஐ.–35 ஹெலிகொப்டர்களும், தரித்து நிற்கும் பதான்கோட் விமானப்படைத்தளத்தினுள் ஊருடுவிய தீவிரவாதிகளை பாகிஸ்தான் உளவுப்பிரிவே அனுப்பியதாக இந்தியா கூறுகிறது.

அரசியல் ரீதியான இணக்கப்பாடுகளை குலைப்பதே இத்தகைய தாக்குதல்களின் பின்னணியாக கருதப்படுகிறது. இதனைத் தடுக்க பாகிஸ்தான் பிரதமரால் கூட முடியாது.

பாகிஸ்தானில் உள்ளது போன்ற நிலை இலங்கையில் ஏற்படுவதை தடுக்க வேண்டுமானால், இராணுவ மறுசீரமைப்புத் திட்டங்கள் அவசியம்.

புலனாய்வுப் பிரிவோ இராணுவத் தலைமைகளோ தன்னிச்சையாக செயற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டுவர வேண்டும்.

தமக்கான ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் அவர்கள் செயற்படுவதிலிருந்து, அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்றதாக பாதுகாப்புக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டால் தான், நிலையான அமைதிக்கான கதவுகள் திறக்கும்.

ஹரிகரன்

LEAVE A REPLY