நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை விவகாரத்தில் தொடர்ந்தும் நழுவல் போக்கு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து சாதகமான கருத்துக்களை அண்மைக்காலத்தில் வெளியிட்டு நாட்டின் மூன்று முக்கிய தலைவர்களும் தற்போது ஒரு நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே இன்னமும் தனது நிலைப்பாடாக இருப்பதுடன் அதனைச் செய்யவேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பின்னர் ஜனாதிபதியிடமிருந்து எந்தவொரு உறுதியான கருத்தும் வெளிவரவில்லை. இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைக்கக்கூடிய கூட்டணியின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதில் அவர் அக்கறை கொண்டிருக்கின்றார்.

இந்த தருணத்தில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டுமென்று பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கடந்த மாதம் கோரிய மஹிந்த ராஜபக்ஷவும் பின்னர் அதுகுறித்த உறுதியான கருத்துக்களை வெளியிட முன்வருவதாகத் தெரியவில்லை என்பதே அரசியல் அவதானிகள் கருத்தாக இப்போது இருக்கின்றது.