நாயாறு பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பாக தவராசா குற்றச்சாட்டு

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்துள்ளமை, தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வாறான செயல்களை தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனிகளாகவிருந்து வேடிக்கை பார்க்காது, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ‘காலங்காலமாகத் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய நீராவியடிப் பிள்ளையார் கோயிலின் வளவிற்குள் இந்தப் புத்தர் சிலை அமைத்தமையானது தொல்பொருள் திணைக்களம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பின் இன்னோர் பரிமாணமானம் என்றேக் கருத வேண்டும்.

ஏற்கனவே இது தொடார்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் பொலிஸாரின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை முல்லைத்தீவு மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் செயலாகும்.

தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளாளேயே, தற்பொழுது இந் நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்பொழுது பதவியிலுள்ளது.

இவ்வாறான சூழலிலும் தொல்பொருள் திணைக்களம் இப்படியான செயல்களில் ஈடுபடுவதனை தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனிகளாகவிருந்து வேடிக்கை பார்க்காது , அரசிற்கு அழுத்தம் கொடுத்து, ஒரு சில அதிகாரிகளின் துவேசச் செயற்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.