நாமல் குமார தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வாசுதேவ

நாமல் குமார தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாமல் குமாரவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

அதனைவிடுத்து அவரை முதலில் விசாரணை செய்யும் நடவடிக்கையில், சதித்திட்டம் இருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்.

நாமல் குமாரவினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அவர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வது சாட்சிகளை வலுவிழக்கச்செய்யும் செயலாகும்.

அதனால் நாமல் குமாரவுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், பொலிஸாரின் விசாரணைகளில் அழுத்தங்கள் இல்லாமல் அவர் விசாரிக்கப்பட வேண்டும்” என வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.