நான் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரத்தை என்னால் மறக்கவே முடியாது – சமந்தா

திருமணத்துக்கு பிறகும் சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து புதிய தெலுங்கு படமொன்றில் 70 வயது கிழவியாகவும் நடிக்க இருக்கிறார்.

தனது சினிமா அனுபவம் பற்றி சமந்தா கூறியதாவது,

‘‘நடிகர் – நடிகைகள் மீது எந்த கதாபாத்திரம் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. கதாபாத்திரங்களில் எளிதாக நடித்து விடலாம் என்றும் நினைக்கக் கூடாது. எனது நீண்ட சினிமா பயணத்தில் நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமுமே எனக்கு முக்கியமானது. கதாபாத்திரத்தை புரிந்து அதுவாகவே மாறிவிடுவேன்.

கதாபாத்திரங்கள் மூலம் வாழ்க்கைக்கு சம்பந்தமான நல்லது கெட்டதை நெருங்கி பார்த்தேன். நிறைய வி‌ஷயங்களை சினிமாவில் கிடைத்த கதாபாத்திரங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன். ‘ஏ மாய சேஷாவே’ தெலுங்கு படத்தில் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. என்னையே அது மாற்றியது. ஒரு நடிகையாக என்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் அதுதான் காரணமாக அமைந்தது.

அதன்பிறகு சமந்தா என்றால் வலுவான கதாபாத்திரங்களை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர்கள் நினைக்க ஆரம்பித்தனர். நல்ல கதாபாத்திரங்கள் அமைய அந்த படம்தான் காரணம். அப்போது இருந்து ஒவ்வொரு படத்திலும் நிதானமாக யோசித்து முடிவுகள் எடுக்க கற்றுக்கொண்டேன். இந்த எச்சரிக்கை உணர்வு என்னை உயர்ந்த இடத்தில் கொண்டு நிறுத்திவிட்டது.’’

இவ்வாறு சமந்தா கூறினார்.