நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது நோக்கம்- டிலான்

நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதே எங்களது தற்போதைய நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, நாடு அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்தது.

மேலும் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது. நாட்டின் கடன் சுமையை 71 வீதமாக குறைக்கவும் வேலையின்மையை குறைக்கவும் முடிந்தது.

நல்லாட்சி அரசிடம் நாடு ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு இதுதான் நிலைமை. இந்நிலையில் தற்போது நாடு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவேதான், அனைத்து துறைகளையும் கட்டியெழுப்பு நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கு, அரசாங்கம் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றது.

மேலும் மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.