நாட்டுக்கு பாதகமான விடயத்தை ஜனாதிபதியோ பிரதமரோ மேற்கொள்ளமாட்டார்கள்- விமல்

எந்த நாட்டு பலம்வாய்ந்த நபர் இங்கு வந்தாலும் நாட்டுக்கு பாதகமான விடயத்தை ஜனாதிபதியோ பிரதமரோ மேற்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோவின் வருகையை காட்டி,சிலர் வீணான பீதியை பரப்ப முயன்றார்கள். அவரை விட பலம்வாய்ந்த நபர் வந்தாலும் அது குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை.

நாட்டின் இறைமையை பாதுகாக்கக் கூடிய தலைமை நாட்டில் உள்ளதால் யார் வந்தாலும் எமக்கு பயம் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறானவர்கள் வந்து சென்ற போது எவரும் குரல் கொடுக்கவில்லை.

கடந்த ஆட்சியில் எம்.சீ.சீ பூர்வாங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கடந்த காலத்தை போல பொம்மை ஆட்சி இன்று இல்லை. நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பத்தான் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கும்.

நாட்டின் இறைமை குறித்து சிந்திக்கும் தலைவர் உள்ள நிலையில், அதற்கேற்றவாறு தான் இராஜதந்திர பேச்சுக்கள் நடக்கும். எனவே நாம் குழப்பமடையவில்லை.

பொம்பயோவோ வேறு யார் வந்தாலும் அவர்களுக்கு ஏற்றவாறு ஆடும் ஆட்சியல்ல இது. எக்காரணம் கொண்டும் எம்.சீ.சீ ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்திருந்தார்.

அமைச்சரவையில் அவர் இது பற்றி விளக்களித்திருந்தார். எம்.சீ.சீ ஒப்பந்தம் செய்யும் அரசில் நாம் பங்காளராக இருக்க மாட்டோம். இந்த ஒப்பந்தம் பற்றி பொம்பயோவுடன் பேசப்படாது என ஜனாதிபதி கூறியிருந்தார்.

எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக இல்லையா என்பது தொடர்பில் இலங்கை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என பொம்பயோ கூறியிருந்தார் என்றும் அவர் கூறினார்.

பொம்பியோவுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்காதது குறித்து சிலர் விமர்சிக்கின்றனர். எந்த ஒப்பந்தமும் கைச்சாத்திட அவர் வரவில்லை. இதற்கு நாம் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.