நாட்டில் கடுமையான சட்டத்திட்டங்களை முன்னெடுக்க மைத்திரி தீர்மானம்

நாட்டின் வனவளத்தை பாதுகாக்க கடுமையான சட்டத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் ஓர் அங்கமாக, சட்டவிரோதமான முறையில் வெட்டு மரங்களை வைத்திருக்கும் மர ஆலை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த திணைக்களத்தின் அதிகாரிகளுடனும் அவர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டு, எதிர்க்காலத்தில் வனவளத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

காடழிப்புக்கு ஏதுவாக அமையும் சகல செயற்பாடுகளையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

சட்டவிரோத மரக் கடத்தலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போன்று வன வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்ட விதிமுறைகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், புதிதாக மர வேலைத் தளங்களை பதிவு செய்வதனை தடைசெய்ய, எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரதூரமான சுற்றாடல் சவால்களுக்கு தீர்வாக நாட்டின் வனப் பரம்பலை 2030ஆம் ஆண்டளவில் 32 சதவீதமாக அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.