நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து!

நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தாம் கவலையடைந்துள்ளதாகவும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது, பாதுகாப்பு தரப்பினர் இந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பிலும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வன்முறை சம்பவங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் மக்களே தம்மை தாம் பாதுகாக்க முற்பாடுவார்கள் எனவும், அவ்வாறான சூழ்நிலையை உருவாக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் தாம் சுயாதீனமாக வாழ வேண்டும் என இன்னுமொரு சமூகமும் எண்ணுவதற்கு தூண்டக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த நாட்டில் எந்த விதமான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது எனவும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.