நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ராஜித!

நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயற்பட்டு நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு முழு ஒத்துழைப்புகளையும் ஜனாதிபதிக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் தற்போதும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மீண்டும் முரண்பாடான நிலையில் இருந்து வருகின்றார். இது நாட்டினது நலனிற்குச் சாதகமானது அல்ல.

நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ளது. இந்த விடயத்தில் ஜனாதிபதி நாட்டினது நலனை முன்னிறுத்தியே தனது நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

ஆனால் ஜனாதிபதி இந்த விடயத்தில் மீண்டும் தனது கடும் நிலைப்பாட்டினைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு ரணில் விக்கிரமசிங்க முழு ஆதரவு வழங்கியிருந்தார்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை மறக்காமல் செயற்பட வேண்டும்” என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.