நாட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது: சாகல

கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வி நிலையிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால், இப்பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

பல்லேகம பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுப்பட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், இப்பாடசாலையை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி பாடசாலைக்கு தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணித்து, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

இப்பிரதேச அமைச்சர் என்ற வகையில் இக்கிராமங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்து பிள்ளைகளின் கல்வி தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது. பிரதேச மக்களின் வாழ்கையை இலகுவாக்கும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கிராமங்களை அபிவிருத்திச் செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு ஊழல் அற்ற சமூகத்தை கையளிப்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்” என அமைச்சர் தெரிவித்தார்.