நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? விளக்கும் சித்தார்த்தன்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவை கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இருக்கின்ற நிலைமைகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். அதனையே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் கட்சிக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவது சில வேளைகளில் பல பிரச்சினைகளை அல்லது தாக்கங்களை ஏற்படுத்துமா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

ஆகவே இவை எல்லாம் சம்மந்தமாக நாங்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து தான் செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவதன் மூலம் நாங்கள் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஒன்று இருக்குமாக இருந்தால் அநியாயமாக ஏனைய தமிழ் சிறுபான்மைக் கட்சிகளை குழப்புகின்ற அல்லது அவர்களைப் பாதிக்கின்றதொரு நிலைமை ஏற்பட்டு விடலாம்.

அது மாத்திரமல்ல அந்தச் சிறுபான்மைக் கட்சிகளுடன் எங்களுக்கு இருக்கக் கூடிய நல்லுறவுகள் அற்றுப்போகிற நிலைமையும் வந்துவிடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கூடியளவிற்கு தென்னிலங்கையிலே செயற்படுகின்ற சிறுபான்மைக் கட்சிகளுடனும் ஒரு பேச்சுவார்த்தை நடாத்தி இது குறித்து ஆராய்ந்து அதன் பிறகு தான் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டு மென்பது தான் என்னுடைய அபிப்பிராயம் என தெரிவித்துள்ளார்.