நாடாளுமன்ற தேர்தலில் தனித்தா சேர்ந்தா போட்டியிடுவது? தீர்மானத்திற்காக காத்திருக்க கூறும் பசில்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் போட்டியிடும் போது பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டா அல்லது தனியாகப் போட்டியிடுவதா என்பதனை தீர்மானிக்க மார்ச் 19ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கூட்டணிக்குள் உள்வாங்கப்படுகின்ற பிரதான கட்சிகள் வடக்கு கிழக்கு போன்ற சில பகுதிகளில் தனித்து போட்டியிடுவதற்கும் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற சந்திப்பின் போது சந்தர்ப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரக் கட்சியின் சார்பில் இதில் கலந்து கொண்டார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா, ஊவா மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது கூட்டணி அமைக்கப்பட்டு அதனூடாக போட்டியிடுகின்ற உபாயங்கள், மாவட்டந்தோறும் அமைக்கப்படவுள்ள தொகுதி அமைப்பாளர்கள், இட ஒதுக்கீடுகள் எனப் பலதும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் போட்டியிடும் போது பங்காளிக் கட்சிகளை இணைத்தா அல்லது தனித்தா போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க மார்ச் 19 ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறு அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தொண்டமான் சில இடங்களில் கூட்டாகவும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவது குறித்து வலியுறுத்தியுள்ளார். அதேவேளை ஆளுங்கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் சில இடங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறலாமென தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா இங்கு குறிப்பிட்டுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேர்தலில் சிலசமயம் கிடைக்காத பட்சத்தில் தனியே கேட்கும் பங்காளிக் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கலாமெனவும் அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சில கட்சிகளை இணைத்து தேசிய அரசமைக்கலாமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விவகாரங்கள் தவிர, தொழிலற்ற ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சி பிரதானிகளிடையே முரண்பாடான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தேர்தலுக்கு முன்னர் இந்த தொழில்வாய்ப்புக்களை வழங்கும்படி ஒருதரப்பினரும், தேர்தலுக்குப் பின் வழங்கலாம் என இன்னுமொரு தரப்பினரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக பொதுஜன முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.