நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பரிந்துரைத்தது அரசாங்கம்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு 8 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட பெயர்ப்பட்டியலை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக சபை முதல்வர் டினேஸ் குணவர்தனவினால் பரிந்துரைக்கப்பட்ட உத்தேச அங்கத்துவ பெயர் பட்டியல் நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியூதின், சம்பிக்க ரணவக்க, மனோ கணேஷன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா, ஆகிய 8 எதிர்கட்சி உறுப்பினர்களின் பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் சார்பாக சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்ட்ன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகிய 9 உறுப்பினர்களின் பெயரும் தெரிவுக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதி நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அனுமதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடருக்கான தெரிவுக்குழு உறுப்பினர்களை உடனடியாக நியமிக்குமாறு கடந்த அமர்வின்போது சபாநாயகர், கட்சி தலைவர்களை கோரியிருந்தார்.

அத்துடன் குறித்த தெரிவுக்குழுவானது, சபாநாயகரின் தலைமையில் கட்சி தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் அடங்கலாக நாடாளுமன்றத்தினால் பெயரிடப்பட்ட 17 உறுப்பினர்களை கொண்டதாகும்.

மேலும் பொது முயற்சியான்மைக்கான நிலையியற் குழு, அரச கணக்கு செயற்குழு உள்ளிட்ட செயற்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமித்தல், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் ஆகியன தெரிவுக்குழுவினூடாகவே முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.