நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் – முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை (வியாழக்கிழமை) பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது தடவையாக கூடியது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜயம்பதி விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரை இந்த வாரம் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார்.

இருப்பினும் பொலிஸ் மா அதிபர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களிடம் முதலில் சாட்சியங்களைப்பெறுவது சிறந்தது என்று ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டிய அவர் இதன் காரணமாகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி டி.ஐ.ஜி. சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா ஆகியோர் சாட்சியம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.