நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்: ஜே.வி.பி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இல் இருந்து குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எந்தவொரு யோசனைக்கும், ஜே.வி.பி. துணைப்போகாது. புதிய அரசியலமைப்பை கொண்டுவர வேண்டும் என்பதில் நாம் கொள்கை ரீதியாக இணங்குகிறோம்.

ஆனால், நாடாளுமன்றின் இப்போதைய நிலைமையில் இதனை கொண்டு வர முடியுமா என்பது எமக்குத் தெரியவில்லை. இதனாலேயே நாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் சட்டத்திருத்தத்தை தனியாகக் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தரப்புடனும் கலந்துரையாட நாம் தயாராகவே இருக்கிறோம். ஆனால், இதுவரை இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவில்லை.

நாம் கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தத்சட்ட மூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் சரத்து மட்டுமன்றி, கட்சித் தாவலுக்கு எதிரான கடுமையான சரத்தையும் இணைத்துள்ளோம்” என லால் காந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.