நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர், யுவதிகள் அதிகம் உள்வாங்கப்பட வேண்டும்- சுமந்திரன் அறிவுறுத்து

நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்கள் யுவதிகள் அதிகளவாக உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை உருவாக்க தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இடங்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆசனப் பகிர்வு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் புதியவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும். குறிப்பாக இளைஞர்கள் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

வாக்காளர்களில் 54 சதவீதம் பெண்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேர்தலில் நியமனம் கொடுக்காதது தவறு. சம அளவில் ஆசனங்கள் கொடுக்காது விட்டாலும் மாவட்ட ரீதியில் இருவர் அல்லது மூவருக்கு இடம்கொடுக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலும் இவ்விடயத்தை குறிப்பிட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இம்முறையும் கூறியுள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும். புதியவர்கள் உள்வாங்குகின்ற போது தற்போதுள்ளவர்களையும் புதியவர்களையும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்குள்ள தகுதிகள் தராதரங்களைப் பார்த்து திறமையானவர்களுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த முறை தேர்தலின் போது குறித்த விடையத்தைச் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்கிவிட்டு வெற்றிடமாக இருக்கின்ற இடத்திற்கு வெல்லக் கூடியவர்கள் நிறுத்தப்படவில்லை. கட்டாயம் தோற்பவர்களைத்தான் தேர்தலில் நிறுத்தியுள்ளார்கள்.

பத்துப் பேரை நியமிக்கின்றபோது ஏழு பேர்தான் தேவை என்றால் மிகுதி மூன்றுபேர் தோற்கடிக்கப்பட வேண்டும். தோற்கின்றவர்கள் நாங்களாக இருக்கக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான நிகழ்வு நடைபெறுகின்றது. எங்களுடைய விடுதலைப் பாதையை அடைவதற்கு அதற்காக உழைப்பவர்கள் உள்வாங்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.