நளினி-முருகன், பேரறிவாளன் உட்பட ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க பரிந்துரை

தமிழக சிறைகளில் கடந்த சில ஆண்டுகளாக அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப்படவில்லை.

இதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தார்.

அதில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது அதற்கான பட்டியலை தயாரித்து வழங்கும்படி கூறப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு விவரத்தை வருகிற 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் 850-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் ஆயுள்தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 214 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 185 பேர் விடுதலை பெறுவதற்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோன்று வேலூர் பெண்கள் சிறையில் 15 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், பெண்கள் சிறையில் உள்ள நளினி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இவ்வி‌ஷயத்தில் நாங்கள் தன்னிச்சையாக ஏதும் செய்ய முடியாது.

அரசிடம் நாங்கள் அனுப்பி வைத்த பட்டியலில் உள்ளவர்கள் குறித்து நன்னடத்தை அதிகாரிகள் பரிசீலித்து யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று இறுதி செய்து உத்தரவிட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY