நல்லிணக்கத்துடன் வாழ்ந்த மக்களிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது: பொலிஸ் அத்தியட்சகர்

நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே தீவிரவாத கொள்கையுடைய சிலரால் மீண்டும் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் தெரிவித்தார்.

சமய சகவாழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் ஒவ்வொருவரும் கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பல்வேறு பாதிப்புகளையும் இன்னல்களையும் சந்தித்தவர்கள். அதன் பின்னர் நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் தீவிரவாத கொள்கையுடைய சிலரால் மீண்டும் பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சிலர் செய்த தீவிரவாத நடவடிக்கையினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தவறு.

இத்தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனைகள் சட்டத்தின் பிடியில் இருந்து தவறினாலும் இறைவனின் பிடியில் அவர்களுக்கான தண்டனைகள் நிச்சயம் உண்டு.

சட்டத்தை மீறி செயற்படுகின்றவர்கள் மாத்திரமே கைது செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமே தவிர சாதாரண அப்பாவி தண்டிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

எமது மாவட்டத்தில் இனம், மதம், மொழி பேதமின்றி சகோதரர்களாக ஒரே நிலைப்பாட்டுடன் சகோதரத்துவத்துடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

மக்களின் பாதுகாப்பிற்காக எங்களினால் முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் இனம் மதம் மொழிகளைக் கடந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.