நல்லாட்சியை தோற்கடிப்பது எப்போது? மஹிந்த

ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுட்காலம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் நிறைவடைந்துவிடும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அளித்த ஆணையை மதித்து, புரிந்து கொள்வதை விடவும் 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கக்கூடாது என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

பௌத்த மக்களின் பெருந்தலைவர்களாக கருதப்படுபவர்களில் ஒருவரான பெல்லன்வில விமலரத்ன தேரர் அண்மையில் இயற்கை எய்தியிருந்த நிலையில், மஹரகமவில் உள்ள விகாரையில் அதற்கான நினைவுதான நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெல்லன்வில விகாரைக்கு விஜயம் செய்திருந்தனர்.

நினைவுதான நிகழ்வைத் தொடர்ந்து விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச அதனையடுத்து விகாரையிலுள்ள பிரதான பிக்குமார்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் இல்லை. அடுத்த வருடம் நல்லாட்சியின் ஆயுள் நிறைவடைகிறது. 500 நாட்களாகின்றன. இன்னும் இருப்பது சொற்ப நாட்களேயாகும். இன்னும் ஒரு வெசாக் போயா தினமே இருக்கிறது. நாங்கள் பல சேவைகளை செய்திருக்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பியிருக்கின்றோம். போரை முடிவுறுத்தியதன் விளைவாகவே விகாரைகளுக்கு பக்தர்கள் வர முடிகிறது.

தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சுதந்திரமாக செயற்படவும், எமக்கு விரோதமாக சரி வாக்களிப்பதற்கும் பலம் கிடைத்திருப்பது விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமையிலாகும். அப்படியான போரை முடிவுறுத்தி அனைத்து துறைகளையும் விஸ்தரப்படுத்தியது எமது அரசாங்கமாகும். பெல்லன்வில தேரர் இருந்திருந்தால் இனப்பிரச்சினை தொடர்பில் போராட்டத்தைக் கையில் எடுத்து போராடியிருப்பார். தைரியமாக கருத்துக்களை வெளியிட்டார். அதுவே மகாநாயக்க தேரர்களதும் கருத்தாகும்.

கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும், லிபரல் இனவாதத்தை நோக்கிச்செல்லும் அரசாங்கம் குறித்து அவர் அண்மையில் விளங்கப்படுத்தினார். இவற்றுக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். மாறாக 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது முக்கியமல்ல” என்றார்.

LEAVE A REPLY