நல்லாட்சியிலும் தொடர்கின்றன தமிழர் விரோத நடவடிக்கைகள்

nnnnnnதமது சொந்தக் காணிகளில் மீள்குடிய மர்வதன்  மூலம் தமது வாழ்வை வளப்படுத்த விரும்பும் தமிழ் மக்களில் பலர், இன்னமும் அகதி முகாம்களிலேயே தமது வாழ்நாளைக் கழிக்க வேண்டியுள்ளது. அதற்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அந்த மக்கள், தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதால் மீள்குடியமர்வை வலியுறுத்தி மிகப்பெரிய அளவிலான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோதக் குடியேற்றங்களை முன்னெடுப்பதற்கு அரசு இரகசியமான முறையில் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க காலத்தில் இருந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.

இலங்கைத் தமிழர்கள் உண்மையிலேயே இந்த நாட் டில் ஒரு பாவப்பட்ட பிறப்புக்களாகவே உள்ளனர். அவர்களுக்கான அனைத்துச் சுதந்திரமும் பறிக்கப்பட்டு உள்ளூரில் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். சிங்கள அரசு இலங்கை சிங்களவர்களது நாடு எனக் கூறிக்கொண்டு தமிழர்கள் மீது அடாவடித்தனமான கட்டமைப்புக்களைத் திணித்து வருகின்றது.

அதில் ஒன்று, இந்த சட்டவிரோத சிங்களக் குடியேற்றமாகும்  டீ.எஸ்.சேனநாயக்க கந்தளாய் உட்பட கிழக்கு மாகாணத்தில் பல சட்டவிரோதக் குடியேற்றங்களை முன்னெடுத்து தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்தும், காடுகளை அழித்தும் அந்தப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தினார்.

அவரால் மூட்டப்பட்ட இந்தத் தீ, இப்போது யாழ்ப்பாணம் நாவற்குழி வரை பரந்து காணப்படுகின்றது. காணியற்ற தமிழ் மக்கள் நாவற்குழியில் உள்ள காணிகளில் தற்காலிகக் கொட்டில்களை அமைத்துக் குடியேறியபோது அந்தக் காணிகளில் இருந்து அவர்களை வெளியேற்றிய பின்னர், அங்கே சுமார் நாற்பதுக்கும் அதிகமான சிங்கள மக்கள்  அத்துமீறிக் குடியேறி வசதியான வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காது அவர்களுக்குரிய  வசதிகளைச் செய்து கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை. தமிழ் மக்களை வெளியேற்றுவதில் அக்கறை காட்டிய தமிழ் அதிகாரிகள் சட்டவிரோதமாகச் சிங்கள மக்கள் குடியமர்ந்தபோது வாய் மூடி மெளனிகளாகியிருந்தனர்.

ஏற்கனவே தென்பகுதி மக்கள் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் அத்துமீறிக் குடியேறியுள்ளனர். தமிழ்ப் பிரதேச கடற்கரையோரக் காணிகளை தென்பகுதி மீனவர்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர். அரசின் முழு ஒத்துழைப்புடன் நாட்டின் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்து தமிழ் அரசியல்வாதிகளால் எதுவுமே  செய்யமுடியாத நிலையே உள்ளது.

இப்போது முல்லைத்தீவை அண்டிய முள்ளியவளைப் பகுதியில் பெருமளவு ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பகுதிகளில்  வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் குடியமர்த்தப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. காடழிப்புத் தொடர்பில் வனப் பாதுகாப்புத் திணைக்களமோ, காணி அபிவிருத்தி, சுற்றாடல் அபிவிருத்தித் திணைக்களங்களோ அனுமதி வழங்கியதாகவும் தகவல் இல்லை.

குமுழமுனை செல்லும்  பாதையில் குமரபுரம் பகுதியில் வேகமாக இடம் பெற்று வரும் காடழிப்பில் இதுவரை அறுநூறுக்கும்  அதிகமான ஏக்கர்களில் காடு அழிக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுத் தென்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காணிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அங்கு தமக்கான நிரந்தர வீடுகளை அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை மேலும் பல கிராமங்களுக்கும் தொடர்வதாகவும் அமைச்சர் ஒருவரின் ஆசியுடன்  இது இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தச் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் எதுவும் செய்யமுடியாத நிலையில் மெளனம் காக்கின்றனர்.

இந்த விடயங்களில் நேர்மையுடன் தலையிடும் பட்சத்தில் தமது தலைக்கே இது ஆபத்தாக முடியும் என்ற அச்சம் அவர்களுக்கு. காணிகள் தொடர்பான சட்டங்களுக்கு அமைவாக தமிழ் அதிகாரிகள் தமது கடமையைச் செய்யவிடாது தடுத்து, உரிய சட்ட விதிமுறைகளை ஒதுக்கி விட்டு, அரசு தமிழ்ப் பிரதேசங்களில்  சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி தமிழ் மக்களின் எண்ணிக்கையை மற்றும் வாக்குகளின் விகிதாசாரத்தைக் குறைப்பதுடன் இது ஒரு சிங்கள நாடு என்ற நிலையை ஏற்படுத்துவதற்கான நகர்வுகள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்கள் விடயத்தில் கடந்த கால அரசுகளும் சரி, இன்றைய அரசும் சரி ஒரே கொள்கையையே அனுசரித்து வருகின்றன. தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மீள் குடியமர்வதற்காகப் பெருமளவு மக்கள் தொடர்ந்தும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். படைத்தரப்பினர் தமிழ்ப் பிரதேசங்கள்  எங்கும் பரவலாக  நிலை நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

இந்திய மீனவர்கள் மட்டுமன்றி  தென்பகுதியில் உள்ள  மீனவர்களும் தமிழ்ப் பிரதேசக் கடல் வளங்களைச் சூறையாட அரசால் அனுமதிக்கப்படுகின்றனர்.  வடபகுதியில் இடம்பெறும் வன்செயல்கள் குறித்து கண்டுகொள்ளாத நிலையில் அரசு இருப்பதுடன், ஒரு சர்வதேச நீதி விசாரணையை நடக்க விடாமல் தடுத்து நிறுத்துவதில் மும்முரமும் காட்டப்படுகின்றது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தினமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு கையில் சீனியையும் மறுகையில் உப்பையும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை நோய்க்கு இலக்காக்கிக் கொண்டே உலகின் கண்களில் நல்லாட்சி என்ற மண்ணைத் தூவிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனோ ஜெனிவாத் தீர்மானம் சிறந்தது, எமது பிரச்சினைக்கான தீர்வுக்கு அது வழியமைக்கும் என அடிக்கடி மக்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார். தமிழர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் முடிவு என்னவாகப் போகிறதோ…?

– வந்தியத்தேவர்

LEAVE A REPLY