நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராய கூடுகின்றது கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது.

நாளை நண்பகல் நாடாளுமன்றம் கூட்டவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியாவிற்கு சென்று மோடியை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.