நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் – ரிஷாட்

தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயாரென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (வியாழக்கிழமை) சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் நம்பிக்கை இல்லாத எந்த வேலையையும் தான் இதுவரை செய்ததில்லை என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெயரைக்கொண்டு பயங்கரவாதிகள் செயற்பட்டதால் தங்களையும் அதனுடன் தொடர்புபடுத்த பலர் முனைவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், இனவாத பின்னணி கொண்ட அந்த முயற்சிகள் வெற்றியடையாதென்றும் அவர்கள் கூறுவதை நிரூபிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் தயாராகவே உள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.