நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்

_94731859_gettyimages-151948322கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.

இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

சந்தேகம் நேர்ந்ததும், ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பிபிசிக்கு விளக்கம் அளித்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் செய்தி தொடர்பாளர், ”முன்னெச்சரிக்கையாக ஜெர்மனி விமானப்படை விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பாதுகாப்பையும், அதில் உள்ள பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது,” என்றார்.

அவர் மேலும், சில நிமிடங்களில் தகவல் தொடர்பு சரிசெய்யப்பட்டது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை நடக்கும் வரை, சம்பந்தப்பட்ட விமானிகள் குழு, வழக்கமான நடைமுறைகளின்படி, பணியிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் பயணிகளை பாதுகாப்பாக லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY