நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்!

Vishal-Songsதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் இன்னொரு அணியினரும் களத்தில் உள்ளனர். வருகிற 18–ந் திகதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது.

இதற்காக 2 அணிகளை சேர்ந்தவர்களும் தேர்தலில் வெற்றி பெற தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் சரத்குமார் எழும்பூர் கோர்ட்டில் விஷால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே நடிகர் விஷாலுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் டி.பிளாக்கில் வசித்து வரும் விஷால் இதுபற்றி அண்ணாநகர் போலீசில் தனது மானேஜர் மூலமாக புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் எனக்கு தேவையில்லாத எண்களில் இருந்து போன் செய்து பேசும் சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே எனது வீட்டுக்கும்; அலுவலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அண்ணா நகரில் உள்ள விஷாலின் வீடு மற்றும் அலுவலகம் அருகில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் போன் வந்துள்ளது என்பது பற்றிய விவரங்களையும் விஷால் போலீசில் தெரிவித்துள்ளார். இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். விஷாலுக்கு மிரட்டல் விடுத்தவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY