நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பனுடன் சந்திப்பு

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை திடீரென்று சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. சந்திப்பின் போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார்.

கருணாநிதியுடனான சந்திப்பை தொடர்ந்து, எம்.ஜி.ஆர். கழக தலைவரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனை நேற்று ரஜினிகாந்த், சந்தித்தார். சென்னை தியாகராயநகர், திருமலை பிள்ளை சாலையில் உள்ள ஆர்.எம்.வீரப்பன் இல்லத்துக்கு நேற்று காலை 11.40 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.

வீட்டுக்கு உள்ளே சென்ற அவர், ஆர்.எம்.வீரப்பனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது. சந்திப்பு முடிந்து பிற்பகல் 12.10 மணிக்கு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனிடம் ‘தினத்தந்தி’ நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று வந்து சந்தித்ததின் முக்கியத்துவம் என்ன?

பதில்:- முக்கியத்துவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்.

கேள்வி:- எவ்வளவு நேரம் சந்திப்பு நீடித்தது? எதை பற்றி பேசினார்?

பதில்:- 30 நிமிடம் பேசினோம். என்னை சந்தித்து வாழ்த்து பெற வந்திருக்கிறேன் என்று கூறினார். அவருடன் 30 முதல் 40 ஆண்டுகளாக நான் பழகி இருக்கிறேன். சிறந்த படங்கள் அவரை வைத்து தயாரித்து வெளியிட்டுள்ளேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் பாட்ஷா படம்.

கேள்வி:- 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் அரசியல் கருத்துகள் இழையோடியதா?

பதில்:- அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

கேள்வி:- தமிழகத்தில் 2 பெரிய திராவிட கட்சிகள் இருக்கின்றன? அப்படி இருக்கும் போது ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவது பற்றி மூத்த தலைவர் என்ற முறையில் உங்கள் பார்வை என்ன?

பதில்:- தி.மு.க. மட்டும் தான் பலமாக இருக்கிறது. அ.தி.மு.க. எம்.ஜி.ஆரை வைத்து ஆரம்பித்த கட்சி. இன்று சுக்குநூறாக உடைந்து போய் பண வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கிறது. அது தி.மு.க. மட்டும் தான்.

கேள்வி:- திராவிட கட்சிகளுக்கு நடுவே ரஜினிகாந்த் கட்சி மாற்றாக வரமுடியுமா?

பதில்:- எதிர்காலம் தான் அதற்கு பதில் சொல்லும்.

கேள்வி:- ரஜினிகாந்த் உங்களை முக்கிய தலைமை பொறுப்புக்கு அழைத்துள்ளதாக தகவல் பரவுகிறதே?

பதில்:- அவருடன் 30 முதல் 40 ஆண்டுகளாக பேசி கொண்டு இருக்கிறேன். அவர் வரவேண்டும் என்று நினைத்து இருந்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க முடியும். அப்போது என்னையே அரசியலுக்கு வரவேண்டாம் என்று சொன்னவர் அவர். ஆகவே எதிர்காலம் பற்றி இப்போது எந்த முடிவும் கூற முடியாது. இன்றைக்கு அரசியல் கட்சி என்றால் அது தி.மு.க. மட்டும் தான்.

கேள்வி:- ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கி போட்டியிட்டால் அது தி.மு.க.வோடு மட்டும் தான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:- அதை எதிர்பார்க்க முடியாது. அவர் கட்சியை தொடங்கும் போது என்ன கொள்கைகளை வைத்து தொடங்குகிறார் என்பதை வைத்து 5 ஆண்டுகளுக்கு பின்பு தெரியும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

LEAVE A REPLY