த.தே.கூட்டமைப்பை பிரித்துவிட்டால் முஸ்லிம்களின் நிலையே தமிழருக்கும்!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் எச்சரிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லிம்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற பனை தெங்கு வள அபிவிருத்தி கூட்டுத்தாபனங்களின் சமாசத்தின் மத்திய அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள காடையர்களின் அடாவடித்தனங்களால் நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தைக் கண்டுள்ளது. தொடர்ந்தும் பேரினவாதிகளால் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது கவலைக்குரிய விடயமாகிறது.

ஐ.நா சபைக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு சர்வதேச ஊடுருவல்களும், துரோகக் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது பெருந்தொகைப் பணத்துடன் சுயேட்சைகள் களமிறக்கப்பட்டன. இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான இரகசிய நிகழ்ச்சி நிரலின் கீழே நடைபெற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லிம் மக்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY