தோழா முத்துக்குமார்… கோடி நன்றிகள் ! – முத்துக்குமார் நினைவு நாள் கட்டுரை

‘விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…?’ என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா…?

தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா… பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்?

அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, வியாழக்கிழமை. புவி வெப்பமயமாதலின் புண்ணியத்தால் வெயில் கொளுத்திய காலை பொழுது. ஊடகவியலாளரான முத்துக்குமார், சென்னை நுங்கம்பாக்காத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு வந்து, அவர் எடுத்து வந்திருந்த கடிதங்களை பொறுமையாக அங்கிருந்த மக்களுக்கு விநியோகித்துவிட்டு, ஈழத்தமிழர்களை காப்பாற்றக் கோரி முழக்கமிட்டு, மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்றவைத்தார்.

பின்னர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அன்றே இறந்தும் போனார். ஆனால், அன்று மதியத்துக்குள் அவரின் கடிதம் உலகெங்கும் பரவி மாணவர்கள், வழக்கறிஞர்கள், திரைப்பட உதவி இயக்குனர்கள், வணிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத, உலகமயமாக்கலுக்குப் பிறகு பிறந்தவர்கள், அவரின் கடிதத்தால் உந்தப்பட்டு, தன்னெழுச்சியாக போராட்டங்களில் இறங்கினர். தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்கிலிருந்தும் சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்தனர். கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. பஸ் மறியல், ரயில் மறியல் என மொத்த தமிழகமும் போராட்ட களமாக மாறியது.

துருப்பிடித்த, காலாவதியான பெரிய அரசியல் இயக்கங்கள் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றவிடாமல், மாணவர்களும், இளைஞர்களும், சிறு இயக்கங்களுமே அவரின் உடலுக்கு காவலாக இருந்தது. அப்போது உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் இருந்த மாணவர்கள், ‘தமிழ் ஈழ விஷயத்தில் ஒரு முடிவு தெரியாமல் முத்துக்குமாரின் உடலை அடக்கம் செய்யமாட்டோம்’ என்றனர். முத்துக்குமாரின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.

முத்துக்குமார் தன் இறுதி கடிதத்தில் இப்படி எழுதி இருந்தார், “என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” ஆனால், ஈழத்திற்காக தங்கள் வாழக்கையை அர்ப்பணித்து விட்டோம் என்று பிரகனப்படுத்திக்கொண்ட அரசியல்வாதிகளின் கயமையினால், அந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அவருடைய பிரேதம் மூலகொத்தளம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

தகனத்திற்காக ஊர்வலமாக எடுத்து சென்றபோது கூட, மக்கள் தன்னெழுச்சியாக வீட்டு வாசலில், கையில் மெழுகுவர்த்தியுடன் நின்றது இன்னும் என் நினைவுகளில் நிழலாடுகிறது. எண்பதுகளுக்கு பிறகு பிறந்த எம் தலைமுறை சாட்சியாக இருந்த ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு அது.

நீங்கள் அந்த கடிதத்தை மீண்டும் படித்து பார்த்தீர்களானால், அது வெறும் ரியாக்‌ஷனரியான கடிதம் இல்லை என்பதை உணரலாம். இப்போது நாம் இங்கு நிலவும் அரசியல் வெற்றிடம் குறித்து பேசுகிறோமே, அதை அப்போதே உணர்ந்து எழுதி இருந்தவர் முத்துக்குமார். “…இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள்” என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

முத்துக்குமார் இறந்து நாளையுடன் ஏழு ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த ஏழு ஆண்டுகளில் அவர் விரும்பிய தலைமை மக்களிடமிருந்தே உண்டாகி இருக்கிறதா என்றால் நிச்சயம் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கு உருவாகி இருக்கிறது… ? இன்றும் மக்கள் சகாயம் போன்ற தனி மனித ஆளுமை பின்னால்தானே ஒடுகிறார்கள். பிறகு எப்படி இங்கு மக்களிடமிருந்தே ஒரு தலைவர் உருவாகி இருக்கிறார் என்று சொல்ல முடியும் என்கிறீர்களா…?

ஆம். மக்கள் தனி மனித ஆளுமை பின்னால் ஓடுகிறார்கள், தம் அழுத்தங்களிலிருந்து மீள அவர்கள் தேவ தூதனுக்காக காத்து இருக்கிறார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால், அரசு என்ன நிகழக் கூடாது என தம் குடிகளை கேளிக்கையில் வைத்து இருக்கிறதோ, அது இந்த ஏழு ஆண்டுகளில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் அரசியல் மயப்பட்டிருக்கிறார்கள். அனைத்து விஷயங்களையும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்குதான் அரசு அஞ்சியது.

அரசுகள் (தமிழக அரசு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள அனைத்து அரசுகளும்) மக்கள் அரசியல் மயப்படக்கூடாது என்று விரும்புகிறது. அதில் மிக கவனமாக இருக்கிறது. மக்களை எப்போதும் ஒரு குற்ற உணர்ச்சியில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. மக்களை சில விதிமீறல்கள் செய்ய தூண்டுகிறது, அனுமதிக்கிறது, கண்டும் காணாமல் இருக்கிறது. ஆம், நாம் அனைவரும் சில விதி மீறல்களுடனே வாழ்கிறோம். இங்கு யாரும் Perfectionist இல்லை. அந்த விதி மீறல்களுக்காக நாம் குற்ற உணர்ச்சியில் வாழ்ந்தால்தான், எந்த மக்கள் புரட்சியும் நிகழாமல் இருக்கும் என அரசு நம்புகிறது.

மேலும் மக்கள் அனைவரும் இணக்கப்பட்டு விடாமலும் அரசு கவனமாக பார்த்துக் கொள்கிறது. நீங்கள் கவனமாக பார்த்தீர்களானால் ஒன்று புரியும். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு வாழ்வாதார பிரச்னைக்காக போராடும்போது, தமிழகத்தில் எங்காவது ஒரு மூலையில் சாதிய மோதல்கள் வெடிப்பதை நீங்கள் காணலாம். மக்கள் அனைவரும் எப்போதும் ஒன்றுபடாமல் இருக்கச் செய்யும். மேலும், எப்போதும் நம்மை சிறு பிரச்னைகளில் வைத்து இருக்கும்.

உள்ளாட்சி அளவிலேயே தீர்க்க கூடிய சிறு பிரச்னைகளைக்கூட தீர்க்காது. இது எதுவும் எதேச்சையானது அல்ல. நாம் சாதி சான்றிதழுக்காக, குடும்ப அட்டைக்காக, அல்லது மின் இணைப்பிற்காக ஒரு இரண்டு வாரமாவது அலைய வேண்டும். அப்போதுதான் நமது மொத்த ஆற்றலும் கரையும். நமது அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டால், அடுத்து நமது அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவோம், கேள்வி கேட்போம், போராடுவோம். இது எந்த அரசுக்கும் உவப்பானது இல்லை.

ஆனால், இந்த ஏழு அண்டுகளில் தமிழகத்தில் எல்லாம் மாறிவிட்டது. வாழ்வாதார பிரச்னைகள் அனைத்திற்கும் மக்கள் வீதிக்கு வந்து போராட துவங்கிவிட்டனர். கூடங்குள போராட்டம் ஆயிரம் நாட்களை தாண்டி தொடர்வது ஆகட்டும், முல்லை பெரியாருக்காக ஒரு லட்சம் மக்கள் தேனியில் கூடியது ஆகட்டும், காவிரிக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கிருஷ்ணகிரியில் திரண்டது ஆகட்டும், தஞ்சையில் மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகட்டும், காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தின் போது சேலத்தில் மதுவுக்கு எதிராக கூடிய ஆயிரக்கணக்காண மக்கள் கூட்டம் ஆகட்டும், ஈரோட்டில் குளிர்பான ஆலைக்கு எதிராக திரண்ட கூட்டம் ஆகட்டும். இது அனைத்தும் எந்த பெரும் அரசியல் கட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் இல்லை. சிறு இயக்கங்கள் ஒருங்கிணைத்தது. இளைஞர்கள் தலைமை தாங்கியது. மக்கள் தன்னெழுச்சியாக போராடியது.

நைரோபியில் டிசம்பரில் கையெழுத்தான WTO-GATS ஒப்பந்தத்தை எதிர்த்து, ஆகஸ்ட் மாதமே தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டமான தருமபுரியில், ‘தருமபுரி மக்கள் மன்றம்’ என்ற சிறு அமைப்பின் தலைமையில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி செல்கின்றனர். இது மக்களிடம் உள்ள அரசியல் தெளிவை காட்டுகிறது.

இதுதான் முத்துக்குமார் விரும்பியது. தற்கொலையை ஒரு போராட்ட வடிவமாக நாம் ஆதரிக்கவில்லை. ஆனால், இங்கு சிலர் புலம்புவதுபோல் முத்துக்குமாரின் உயிர் ஈகம் வீணாகவில்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த ஒரு தலைமுறையை அவன் அரசியல்படுத்தி சென்றுவிட்டான். இன்னும் சில ஆண்டுகளில் அவன் விரும்பியதுபோல் நிச்சயம் மக்களிடமிருந்தே தலைவர்கள் உருவாகுவார்கள்.

முத்துக்குமார் எழுதியது போல், இளைஞர்களிடம் இருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், முத்துக்குமார் சொல்லியது போல், நம் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விடாமல் இருப்பதுதான்.

LEAVE A REPLY